தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முன் மாதிரி தேர்வாக முழுமையான அனைத்து பாடங்களும் அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.


மாதிரி அரசு போட்டித் தேர்வு


தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பீனிக்ஸ் மற்றும் என்ஆர் ஐஏஎஸ் அகாடமி ஆகியவை இணைந்து இந்த போட்டி தேர்வை நடத்தின/ இதில் 276 மாணவ. மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அனைத்துப் பாடங்களில் இருந்து அரசு தேர்வு எவ்வாறு நடத்தப்படுமோ அதேபோல் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில் நடத்தப்பட்டது.  மேலும் தேர்வு எழுதி முடித்தவுடன் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் உடனடியாக திருத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.




முதல் 5 மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு


இதில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான தக்க ஆலோசனைகள் மற்றும் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மதியம் இரண்டு மணிக்கு தொடங்கி தேர்வு 3 மணி நேரம் நடந்தது. இந்த தேர்வில் முதல் ஐந்து மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 


மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட நூலக அலுவலர் முத்து பார்வையிட்டார். மேலும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பீனிக்ஸ் தலைவர் விஜயாலயன், செயலாளர் அப்துல்லா, பொருளாளர் அழகப்பன், திட்ட ஆலோசகர் நடராஜ சுந்தரம், திட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் மற்றும் என்ஆர் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.


போட்டித் தேர்வை எழுத மாணவர்களுக்கு சிறப்பு வசதி


இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் பா முத்து கூறியதாவது: மாவட்ட மைய நூலகத்தில் 450க்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டி தேர்வுக்காக பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் குரூப் 1, 4, எஸ்எஸ்சி, பேங்க் எக்ஸாம், மத்திய அரசு பணிக்கான தேர்வுகள், காவல்துறை பணிக்கான தேர்வுகள் உட்பட பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்காக படித்து வருகின்றனர் 


இலவச வைபை வசதி


தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் பயின்ற மாணவர்களில் 27 பேர் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் அமர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான பாடங்களை எடுத்து படிப்பதற்கு இலவச வைபை வசதி, இலவச ப்ரவுசிங், போட்டி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக இலவசமாக பிரவுசிங் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்வது போன்ற ஏராளமான வசதிகள் மாணவர்களுக்காக அரசு பொது நூலகத்துறை இயக்குனர் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டமைய நூலகத்தில் செய்து தரப்பட்டுள்ளது.


போட்டித் தேர்வு நடத்தப்பட்டது


ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்கள் அரசு போட்டித் தேர்வை எழுத இங்கு அனைத்து வசதிகளிலும் செய்து தரப்பட்டுள்ளது அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது இதை அவர்கள் அச்சமின்றியும் பதற்றம் இன்றியும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் தற்போது அனைத்து பாடங்களிலிருந்தும் முழுமையான கேள்விகள் அதாவது 200 மதிப்பெண் இருக்கு தேவையான அனைத்து கேள்வி அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டு இந்த போட்டி தேர்வு நடத்தப்பட்டது.


தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம் சார்பில் இவ்வாறு தேர்வு நடத்தப்படுகிறது முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை. கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி நூலகத்திலும் போட்டி தேர்வு எதிர்கொள்ள தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவர் அவர் தெரிவித்தார்.