அன்று முதல் இன்று வரை திரையுலம் எத்தனையோ வில்லன் நடிகர்களை கடந்து வந்துள்ளது. ஆர்வம் கொண்ட பலரும் அவரவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து விடுவார்கள். ஒரு சில கதாபாத்திரங்களில் இவர் தான் மிகவும் பொருத்தமானவராக இருக்க கூடும் எனும் அளவுக்கு தனித்துவம் வாய்ந்த நடிகர்கள் சிலர் நிரூபித்துள்ளனர்.
நம்பியார் முதல் பிரகாஷ்ராஜ் வரை பலரும் வில்லன்களாக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமாகி உள்ளனர். அந்த வரிசையில் முந்தி நிற்கும் ஒரு வில்லன் நடிகர் தான் செந்தாமரை. தனக்கென ஒரு தனி மேனரிஸம் கொண்டு அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் கலந்து கட்டிய நடிகர் செந்தாமரை 89ஆவது பிறந்ததினம் இன்று.
ரஜினியின் வில்லன் :
கதாநாயகர்களுக்கு சரிசமமான அங்கீகாரத்தை வில்லன் நடிகர்கள் பெற்று வரும் நிலையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றவர் நடிகர் செந்தாமரை என்ற பெருமைக்குரியவர். நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். நடிகர் ரஜினிகாந்துக்கு இணையான ஒரு வில்லனாக 90ஸ் காலகட்டத்தில் கலக்கியவர் நடிகர் ரகுவரன் என்றால், 80ஸ் காலக்கட்டத்தில் அந்த இடத்தை தக்க வைத்தவர் நடிகர் செந்தாமரை.
அவரின் வசன உச்சரிப்பு, உடல் மொழி, எள்ளல் சிரிப்பு, குரூரமான பார்வை, முறுக்கிய மீசை என அனைத்துமே தனித்துவம் வாய்ந்தது. எத்தனையோ பிரபலங்களின் குரலை மிமிக்ரி செய்யும் கலைஞர்களால் கூட செந்தாமரையின் குரலை மிமிக்ரி செய்யமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலகட்டம் :
ஏழு வயதில் தன்னுடைய தந்தையை இழந்த செந்தாமரை சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தார். அறிஞர் அண்ணாவின் வீட்டின் எதிரே வசித்ததால் அவருடைய அறிமுகம் பெற்று நன்மதிப்பையும் பெற்றார். அவர் மூலம் நாடகக் குழுவில் சேர சிபாரிசும் கிடைத்தது. நடிகர் சிவாஜியின் நாடகக் குழுவில் சேர்ந்து பின்னர் அதன் மூலம் சினிமாவில் நடிகரானார். சிறு சிறு கதாபாத்திரங்களில் வந்து போனாலும் அதைத் திறம்பட படித்து அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய கூடியவர்.
நடிப்புக்கு தீனி :
பொல்லாதவன், தனிக்காட்டு ராஜா, கழுகு, நான் மகான் அல்ல, அடுத்த வாரிசு, படிக்காதவன், மூன்று முகம் உன் கண்ணில் நீர் வடிந்தால், நான் அடிமை இல்லை, பணக்காரன், குரு சிஷ்யன், தம்பிக்கு எந்த ஊரு, அதிசய பிறவி, தூறல் நின்னு போச்சு உள்ளிட்ட ஏராளமான படங்கள் அவரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்கள்.
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் :
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தி மிளிர்ந்த ஒரு நடிகர். கம்பீரமான போலீஸ் கதாபாத்திரங்களில் பொருந்தி நடிக்க கூடியவர். வார்த்தைகளில் இருக்கும் வலிமையைக் காட்டிலும் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும் நடிகர் செந்தாமரை தமிழ் சினிமா கண்ட ஒரு பொக்கிஷம். 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தன்னுடைய 57வது வயதில் காலமானார். அவர் இந்த உலகை விட்டு மறைந்ததும் அவரின் எண்ணற்ற கதாபாத்திரங்கள் மூலம் என்றுமே அவரின் புகழ் ஓங்கி நிற்கும்.