மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி முதுகலை மாணவர்கள் சேர்க்கை குறைவு தொடர்பாக பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுப்பு முதல்வர் தனக்கு பதவி வேண்டாம் என கூறி கன்வீனியருக்கு கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காமராசர் பல்கலைக்கழக கல்லூரி
மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் காமராசர் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் முதல்வருக்கான காலியிடம் நிரப்பப்படாத நிலையில் பொறுப்பு முதல்வராக சமூக அறிவியல் துறையின் தலைவர் புவனேஸ்வரன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொறுப்பு முதல்வர் புவனேஸ்வரன் தன்னை, பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சமூகவியல் துறைக்கு பணியாற்றச் செய்யுமாறு, பல்கலைக்கழக கன்வீனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனுடன் பேராசிரியர்கள் இடையேயான வாக்குவாதம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளையும் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்வீனியருக்கு கடிதம்
அந்த கடிதத்தில், ‘’மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியின் பொறுப்பு முதல்வரான என்னுடைய தலைமையில் இன்று காலை முதல்வர் அறையில் துணைத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது, அப்போது முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகளை 5ஆம் தேதி திறப்பது தொடர்பாக விவாதம் நடந்தபோது சில துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கை 20 மாணவர்களுக்கு குறைவாக இருந்தது. அந்த குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள துறைகளையும் திறக்கலாமா என பி.காம் சி.ஏ துறை தலைவர் ராணி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் மோகன், பேராசிரியர் ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மற்ற துணைத்தலைவர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தபோது, பேராசிரியர் மோகன் பேராசிரியர் ராணியை வெளியே போ என கூறியதோடு ஒருமையிலும் பேசினார்.
இதனால், பேராசிரியர் மோகனிடன் நீங்கள் ஒருவரே இந்த கல்லூரி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என கூறியதோடு இந்த இருக்கையில் அமர்ந்து பணியாற்ற முடியாது, என்று கூறிவிட்டு அதை விட்டு வெளியே வந்துவிட்டேன். எனவே கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தன்னை விடுவித்து என்னுடைய சமூகஅறிவியல் துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும்’’ என பல்கலைக்கழக கன்வீனருக்கு எழுதிய கடிதத்தில் பொறுப்பு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய துறைக்கே மாற்றுங்கள்
’’இந்த கல்லூரியில் இவர் போன்ற பேராசிரியர் மத்தியில் என்னால் பணியாற்ற முடியாது. என்னை கல்லூரி பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து விடுவித்து மீண்டும் நான் பணியாற்றிய சமூகஅறிவியல் துறைக்கு மாற்றுங்கள்’’ என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வாக்குவாதம் நடைபெற்றதற்கான சிசிடிவி காட்சிகளை ஆதாரத்தோடு சமர்ப்பித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது.
ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகளும் மோதல்களும் இருந்து வரும் நிலையில் பொறுப்பு முதல்வரும் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க கோரி கன்வீனருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.