முழுமையான இரட்டை இளநிலை படிப்புகளான பி ஏ பி எட், பி எஸ் சி பி எட் மற்றும் பிகாம் பி எட்  ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில்  ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.   
  
2030-க்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு கடந்தாண்டு தேசிய கல்விக் கொள்கை, 2020-க்கு  ஒப்புதல் அளித்தது.இந்த தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் மூலமாக மட்டுமே 2030-ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 


தற்போதுள்ள 5 வருட திட்டத்துடன் ஒப்பிடும் போது நான்கு வருடங்களிலேயே இந்த கல்வி நிறைவடைவதால் மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சமாகும். 2022-23-ம் கல்வி ஆண்டில் இருந்து நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் கீழ், கல்வி துறைக்கான பட்ட படிப்போடு (B.ED) வரலாறு, கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிக பிரிவுகளிலும் பட்டப்படிப்பை இத்திட்டம் வழங்கும். இதற்கான பாடத் திட்டத்தை கல்வி  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு வடிவமைத்துள்ளது.


மேலும், ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு, ஒருங்கிணைந்த கல்வி, இந்தியா மற்றும் அதன் விழுமியங்கள், கலைகள், கலாச்சாரங்கள் குறித்த புரிதல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய தேர்வு முகமை மூலம் தேசிய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு இதற்கான சேர்க்கை நடைபெறும். 


உயிருக்கு போராடும் ஆசிரியர்... உருக்கமாய் வழிபாடு நடத்திய மாணவர்கள்! பரமக்குடியில் நெகிழ்ச்சி!


முன்னதாக, தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை (National Curriculum Frameworks) உருவாக்குவதற்கான தேசிய வழிநடத்தும் குழுவை(National Steering Committee) கல்வி அமைச்சகம் 2021 செப்டம்பர் 21 அன்று அமைத்தது.


தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அம்சங்களின் படி- பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம், ஆசிரியர் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் வயது வந்தோர் கல்விக்கான தேசியப் பாடத்திட்ட அமைப்பு போன்ற நான்கு தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புகளை இக்குழு உருவாக்கும். 


பாடத்திட்டச் சீர்திருத்தங்களை முன்மொழிய இந்த நான்கு பகுதிகளுடன் தொடர்புடைய தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அனைத்துப் பரிந்துரைகளையும் மையமாகக் கொண்டு பள்ளிக் கல்வி, ஆரம்ப கால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE), ஆசிரியர் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை இந்தக் குழு விவாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண