திருச்சி அருகே அரசுப் பள்ளியில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டதால், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தைப் பார்வையிட்டு, உணவின் தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். பின்பு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகள் சாப்பிடும் உணவு  என்பதால், சுத்தமாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் பேசுகையில், ''தமிழ்நாடு முதல்வர் பள்ளி குழந்தைகளுக்காக இந்த காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும் காலை உணவு திட்டத்தில் எந்த விதமான குறைகளும் வரக் கூடாது.


நான் எந்த மாவட்டத்திற்கு ஆய்வு சென்றாலும் முதலில் அரசுப் பள்ளிக்குச் சென்று  காலை உணவுத் திட்டத்தைப் பற்றி ஆய்வு செய்வேன். மேலும்  மாணவர்கள் உடன் அமர்ந்து உணவு அருந்துவேன். அதே சமயம் அவர்களின் வாழ்க்கை, குடும்ப சூழலை பற்றி விசாரிப்பேன். இந்நிலையில் திருச்சியில் இன்று அரசு சையது முர்துசா  பள்ளியில் ஆய்வு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது'' என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து  பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 




                 
அவருடன்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி, மாவட்டக் கல்வி அலுவலர் சிவக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர்  மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி, ’’மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, உடல்நலத்துடன் கூடிய கல்வியை உறுதி செய்ய, முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வரும் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம். 


அங்கு வழங்கப்படும் உணவை மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து சாப்பிட்டபோது, பள்ளியிலேயே வழங்கப்படும் காலை உணவு சிறப்பாக இருக்கிறது என மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது.


பசி நீக்கி அறிவு புகட்டும் இத்திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும்.


முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற போது, கலைஞர் திறந்து வைத்த பள்ளிக் கட்டடம், NCC அலுவலகம், கழிவறை உள்ளிட்ட இடங்களில் இன்று ஆய்வு செய்தோம். மாணவர்கள் மத்தியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர்களுடன் கலந்துரையாடினோம். நம் திராவிட மாடல் அரசு மாணவர்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும்’’ என்று தெரிவித்துள்ளார். 


அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தையாளர்கள் ஒருங்கிணைந்து, கலந்து கொண்டனர்.