Minister Udhayanidhi Stalin: ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடையை நீக்கி உச்ச நீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு அரசின் வக்கீல்கள் மூலம் வாதாடி பெற்று கொடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைகளின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம்  சிப்காட் அருகே நேற்று அதாவது ஜூன் 18ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் பேசியதாவது, “ஜல்லிக்கட்டினை நடத்த விடக்கூடாது என்பதற்காக ஒரு கும்பல் போராடியது. ஆனால் தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதற்கு இளைஞர்கள் நடத்திய போராட்டம் தான் காரணம் என அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் பாசிச கட்சி அரசியலில் புதிய ஜல்லிக்கட்டை  தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஜல்லிக்கட்டை கூட அவர்களால் நேர்மையாக விளையாடமுடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர். ஜல்லிக்கட்டை பொறுத்தவரை வாடிவாசல் வழியாக தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சி புறவாசல் வழியாக தான் வருகிறது. அதனை எப்போதும் தமிழ்நாடு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாடு மக்கள் ஒட்டுமொத்தமாக போராடியதற்கு கிடைத்த வெற்றி தான் ஜல்லிக்காட்டுக்கான தடை நீக்கம். இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது என பேசினார். 


மேலும் அவர் தனது உரையில், ”ஜல்லிக்கட்டுக்கான தடை விதிக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுக்கு அவர்களின் வெற்றியைக் கூட முழுமையாக கொடுக்காமல் கொலைவெறி தாக்குதலை நடத்தியது அ.தி.மு.க. அரசு.  ,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழ்நாட்டில் நுழைய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க.வின் கிளை கழகமாகவே அ.தி.மு.க. மாறிவிட்டது. மத்திய அரசின் அடக்குமுறையை கண்டு தி.மு.க. ஒருபோதும் பயந்தது கிடையாது. எத்தனை மோடி, அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்யமுடியாது” என கூறினார். 


மேற்கொண்டு பேசிய அவர், ”பா.ஜ.க.வின் தொண்டர் படையாகவே வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. மாறிவிட்டது.  2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அமலாக்கத்துறை 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது. இதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகத்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மோடியிடம் நெருக்கமாக உள்ள அதானியிடம் அமலாக்கத்துறை  இதுவரை விசாரணை நடத்தவில்லை. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்படமாட்டோம். வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம்” என பேசினார்.