Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 149வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 149வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.




இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.