தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். டென்மார்க் நாட்டில் கல்வி வளர்ச்சி பற்றியும், அங்குள்ள வாய்ப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.


அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்கள் சார்ந்த திட்டங்கள் குறித்து அந்நாட்டு கல்வித்துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.






புதுமைப் பெண் திட்டம்


மேலும் புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், உலகத்திற்கே முன்மாதிரியாகத் திகழும் முதலமைச்சர் காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்முறைகள் குறித்தும் அவர்களிடம் விளக்கினார்.




முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த தெலங்கானா அதிகாரிகள், அங்கும் காலை உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தனர். கனடாவிலும் அண்மையில் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.


காலை உணவுத் திட்டம்


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து 31,008 அரசுத் தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 18.54 இலட்சம் மாணவ, மாணவியர் இன்று பள்ளி வந்ததும் சூடான, சுவையான காலைச் சிற்றுண்டியை உண்டு படிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.


இந்தக் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2.50 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.


தமிழக அரசின் காலை உணவுத்திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளதாகவும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 21 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.