பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்க முடியும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான பணி ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், பாப்பம்பட்டி பிரிவு, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில், இன்று (16.12.2024) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பணி ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அமைச்சர் பேசியதாவது,
’’தமிழ்நாடு முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். புதுமைபெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், என எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியையும், சுகாதாரத்தையும் தனது இரண்டு கண்களாக பார்க்கின்றார்கள். அனைவரும் இணைந்து ஒரு சிறந்த கல்வி கட்டமைப்பை உருவாக்கி கொண்டு இருக்கிறோம். பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறனை மேலும் மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது.
அரசின் சார்பில் பள்ளிக் கல்வித் துறையில் கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா, விலையில்லா பொருட்கள் மாணவர்களை சென்றடைகிறதா, குறிப்பாக மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் முறையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எதற்காக இந்த ஆய்வுக் கூட்டம்?
அனைத்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துவதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருகின்ற மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை
மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றதோ அந்த மாவட்டத்திற்கு பாராட்டுக்களையும், எந்த மாவட்டங்கள் குறைவான செயல்பாட்டினை கொண்டுள்ளனவோ அதற்கான காரணங்கள் குறித்தும், ஆய்வு செய்து வருங்காலங்களில் அதன் செயல்பாட்டினை மேம்படுத்தி ஊக்கப்படுத்துவதற்கும், இதுதொடர்பாக அனைவரின் கருத்துக்களை பரிமாற்றம் செய்வதற்கும், சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை பதிவிடவும். இரண்டுநாட்கள் இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது.
இக்கூட்டத்தில் வழங்கப்படுகின்ற அறிவுரைகளை முதன்மைகல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவேண்டும்.
தேர்ச்சி விகிதத்தை அதிகரியுங்கள்
நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கவும், தேர்ச்சி பெறாத மாணவர்களை தேர்ச்சிபெற செய்யவும், போதிய நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.
அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் உயர்தர ஆய்வகங்கள் கொண்டுவருவதற்கும், கணினிகளில் பழைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் எல்லாம் மாற்றப்பட்டு, தற்போது என்ன மாதிரி புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் உள்ளதோ அவற்றை பயன்படுத்தவும், எற்கனவே உள்ள உயர்தர ஆய்வகங்களில் எந்த பொருட்கள் எல்லாம் அதிக நாள் பயன்பாட்டில் உள்ளதோ அவற்றிற்கு பதிலாக புதியவற்றை மாற்றவும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு புதிய உயர்தர ஆய்வகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுபோன்று அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில் மாணவ மாணவியர்களின் தேர்ச்சிவிகிதம் அதிகரித்துக்கொண்டு ஒருக்கிறது.
அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அவை பெருமையின் அடையாளம். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம், அரசூர், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செல்வன். ஐசக் ஜெபக்குமார், செல்வன் மருதீஷ், செல்வன். வீரமணி ஆகியோர் வடிவமைத்த பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் பார்வையற்றோருக்கான கண்ணாடி ஆகிய இரண்டு கருவிகளை வடிவமைத்து, ஒரு கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அவற்றினை காட்சிப்படுத்தி, பரிசு பெற்றனர்.
80 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பாராட்டு
அந்த நிகழ்ச்சி அனைத்து சமூக வலைதளங்களில் பரவி 80 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இரண்டு புதிய கருவிகளின் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மூன்று மாணவர்களுக்கு மனதார பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அரசு என நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தங்கள் திறமையை வெளிப்படு த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அரசுப்பள்ளி மாணவர்கள் இதுபோன்று பல்வேறு சாதனைகள் செய்து வருகிறார்கள். இந்தப்பள்ளிக்கு மாநகராட்சி சார்பில் பொது நிதியிலிருந்து ரூ.66 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர்’’.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.