கிராமப்புறத்தில் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வீட்டில் பூட்டி வைத்து பாதுகாக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள். சமூக நோக்கத்துடன் மனவளர்ச்சி பள்ளியினர் தினமும் வாகனங்களில் அழைத்து வந்து 3 மாணவர்களுக்கு கல்பாக்கத்தில் பயிற்சி அளித்ததின் ஊக்கம். கூண்டுக்குள் அடைபட்ட கிளிபோல் பூட்டிய வீட்டில் அடைபட்டு கிடந்த 3 மாணவர்களும் வெளி உலகில் வந்து 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று நெகிழ்ச்சி

 


செங்கல்பட்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்


செங்கல்பட்டு மாவட்டத்தில் 15968  மாணவர்களும்,15948 மாணவிகளும் மொத்தம் 31916 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இவற்றில் 13,317 மாணவர்களும்,  14 ஆயிரத்து 572 மாணவிகளும் மொத்தம் 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்  83.40,  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.37, மாவட்ட மொத்த தேர்ச்சி சதவீதம் 87.38 ஆக உள்ளது. இதில் பல்வேறு  மாணவர்கள் பல்வேறு வகையான சாதனைகளை படைத்திருக்கின்றனர்.  அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 3  மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள்  பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சி ஏற்பாடு உள்ளது.



" வறுமை கோட்டுக்கு கீழ்  "


 

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது16), அதேபோல் பெருந்துறை கிராமத்தை சேர்ந்த வசந்த் (வயது15), நல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது16), வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர்கள் 3 பேரும் தங்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகளில், மற்ற மாணவர்களை போல் சேர்ந்து படிக்க முடியாமல் பரிதவித்தனர். மேலும் கூலி வேலைக்கு செல்லும் இவர்களது பெற்றோர்கள், மனவளர்ச்சி குன்றிய தங்கள் மகன்கள்  எங்கேயாவது சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் தினமும் இவர்களை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வேலைக்கு செல்வார்களாம். 

அன்பு -- பாசம்


 

கைதி போல் வீட்டில் அடைபட்டு கிடக்கும் இவர்களின் வறுமை நிலை, குடும்ப சூழ்நிலையை எண்ணி, கல்பாக்கம் பகுதியில் சமூக சேவையுடன் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி நடத்தி வரும் தேசிங்கு என்பவர் இம்மாணவர்களின் ஏக்கத்தை உணர்ந்து தனது மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் அழைத்து வந்து சேர்த்து, அந்த 3 மாணவர்களுக்கு என்று ஒரு பெண் பயிற்சியாளரை நியமித்து அவர்களிடம் அன்பு, பாசம் காட்டி 10-ம் வகுப்பு பாடங்களை பயிற்றுவித்தார். அந்த மாணவர்கள் மெல்ல, மெல்ல படிக்க ஆரம்பித்தனர். பிறகு மூன்று மாணவர்களும் தற்போது புதுப்பட்டினம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முதல் முயற்சிலேயே எந்த ஒரு பாட பிரிவிலும் பெயில் ஆகாமல் அனைத்து பாட பிரிவிலும் நல்ல மதிபெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

சாதனை படைத்த மாணவர்கள்


தங்களுக்கு மனவளர்ச்சி இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படித்து தேர்ச்சி பெற்ற அவர்கள் அடுத்து 11, 12-ம் வகுப்பு தேர்வுகள் எழுதி பட்டப்படிப்பு படிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த 3 மாணவர்களும் தங்கள் கிராமங்களில் மற்ற மாணவர்களின் அன்பு, அரவணைப்பு கிடைக்காததால் ஆரம்ப பள்ளி படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக கல்பாக்கம் மனவளர்ச்சி பள்ளியில் சேர்ந்து தங்களது ஞாபகத்திறன், கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், எழுத்துதிறன், தன்னம்பிக்கை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்திலேயே 10-ம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் 3 பேர் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.