எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று இணையதளம் மூலமாகவும் நேரிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவினருக்கு இணையம் மூலமாகவும் சிறப்புப் பிரிவினருக்கு நேரிலும் இந்த மருத்துவக் கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
72,743 பேர் விண்ணப்பம்
2025- 26ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடங்கியது. 25ஆம் தேதி வரை 72,743 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் தகுதியான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 39,853 பேரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களில் 4,062 பேரும் இடம் பெற்றனர். அதேபோல நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றனர். இவர்களுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 30) தொடங்கி உள்ளது.
இன்று தொடங்கிய கலந்தாய்வு
குறிப்பாக, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் இன்று (ஜூலை 30) காலை 10 மணிக்குத் தொடங்கியது.
நேரடியாகவும் நடக்கும் கலந்தாய்வு
அதேபோல, நேரடியாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் இன்று தொடங்கியுள்ளது. சென்னை, ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் நடந்து வருகிறது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு: https://tnmedicalselection.net