எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியான நிலையில், மாநில இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19-ம் தேதி ஆன்லைனில் தொடங்க உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதி தொடங்குகின்றன.
முன்னதாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடக் கலந்தாய்வு அக்டோபர் 11-ம் தேதி தொடங்கிய நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.
மத்தியக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. அக்டோபர் 20 வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.
மாநில இடங்களுக்கு அக்டோபர் 19-ல் கலந்தாய்வு தொடங்கி, 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.
மாநில இடங்களுக்கு நவம்பர் 7-ல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடங்கி, 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். இதைத் தொடர்ந்து முழுமைச் சுற்று (Mop up Round) கலந்தாய்வும், விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதிச் சுற்று (Stray Vacancy) கலந்தாய்வும் நடைபெறும் என்றும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
மத்தியக் கலந்தாய்வு
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 10 வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 18ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.
முதலாம் ஆண்டு வகுப்புகள்
அதேபோல நவம்பர் 15-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. சிறப்பு பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுகளுக்கு மட்டும் ஆப்லைனில் கலந்தாய்வு நடந்தது.
5,050 எம்பிபிஎஸ் இடங்கள்
தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடும். மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும்.