தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

திருச்சி தெப்பகுளம், சிங்காரத்தோப்பு கடை பகுதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம், கடும் போக்குவரத்து நெரிசல்.

Continues below advertisement

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையில் பட்டாசு, இனிப்பு வகைகளுக்கு அடுத்தபடியாக மிக முக்கியப் பங்கை வகிப்பது புத்தாடைகளே. ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படும் புத்தாடைகளை வாங்குவதில் இளைஞா்கள், இளம்பெண்கள், சிறுவா், சிறுமிகளுக்கு அலாதி பிரியம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க  திருச்சி கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடைவீதி மற்றும் சின்னக்கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளிக்கடைகளில் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கடைவீதிக்குள் கார்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்காமல் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் போலீசார் மாற்றுடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தவிர, என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Continues below advertisement


மேலும் கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார், 20 ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக வேலையிழந்ததாலும், தொழில் முடக்கத்தாலும் கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை குதூகலமாக கொண்டாட முயவில்லை. தற்போது அனைத்து தரப்பு மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி மற்றும் பொருட்களின் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. நேற்று ஒரேநாளில் ஏராளமான பொதுமக்கள் ஜவுளி வாங்க கடைவீதிக்கு கார், இருசக்கர வாகனங்களில் குவிந்ததால் அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் மற்றும் யானைகுளம் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு வி.பி.ரோடு கெயிட்டி திரையரங்கம் உட்புறமுள்ள கார் நிறுத்துமிடம் மற்றும் சோபிஸ் கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே மைதானம் ஆகிய இடங்கள் என்று மொத்தம் 6 இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலானோர் சாலையோரங்களிலேயே தங்கள் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தி சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசாரால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனால் மேலப்புலிவார்டு சாலை, மதுரை சாலை, கரூர் பை-பாஸ் சாலை, சாஸ்திரி ரோடு, சாலைரோடு, தில்லைநகர், தஞ்சாவூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola