தமிழ் சினிமாவில் எப்படி நடிகர், நடிகைகளை கலைஞர்கள் என்கிறோமோ அதுபோல் தான் கால்நடைகளும். நல்ல திறமையான விலங்குகளும் நடிகர்களாகவே பாவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் 27 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் திறம்பட நடித்து பெயர் பெற்ற அலெக்ஸ் என்கிற குதிரை தன் வாழ்வை முடித்துக் கொண்டாலும், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கார்த்தி உடன் பயணம் செய்த வகையில் அலெக்ஸ் குதிரையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 23 ஆண்டுகளுக்கு முன் திரை உலகில் நுழைந்த அலெக்ஸ் பற்றி அதன் உரிமையாளரும் குதிரை பயிற்சியாளருமான தமிழரசன் விகடன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி:




‛‛குதிரையோடு அதிகம் பயணம் செய்பவர் வந்தியத்தேவன் தான். அப்படி பார்க்கும் போது, கார்த்திக் சார் தான், பொன்னியின் செல்வன் படத்தில் அதிகம் குதிரையோடு பயணித்திருப்பார். ஏற்கனவே கார்த்திக் சாருடன் எனக்கு நல்ல நெருக்கம் இருந்தது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கொள்ளையர்களை பிடிக்க கார்த்திக் சார் குதிரையில் செல்வார். அங்கிருந்தே அவருடன் பயணித்து வருகிறேன். 


பொன்னியின் செல்வன் படத்தை பொருத்தவரை படம் முழுக்க குதிரையுடன்  பயணிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியிருந்ததால், கார்த்திக் சார் குதிரையுடன் நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டார். காலையிலேயே வந்து குதிரைக்கு உணவளிப்பது, குளிப்பாட்டுவது போன்ற நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார். தினமும் பிஸ்கட், கேரட் வாங்கி வந்து குதிரைக்கு தருவார். குதிரை அவரோடு நன்கு பழகிவிட்டது. அவர் கார் வந்ததுமே, குதிரை அவரை எதிர்பார்த்து நிற்கும். 


தினமும் படப்பிடிப்பில் அவர் செல்லும் இடமெல்லாம், அவருடனேயே சுற்றிக் கொண்டிருந்தது. அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமாகிவிட்டனர். கார்த்திக் சார் பயன்படுத்தி செம்மா என்கிற குதிரை பெயர் அலெக்ஸ். இதற்கு முன் கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறது. குதிரைக்கு வயது 20 முதல் 30 வரை தான் அதன் வாழ்வு காலம். இத்தனை ஆண்டுகளில் நிறைய படங்களில் நடித்திருக்கிறது அலெக்ஸ். 


நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தது. மகாராஷ்டிராவில் இருந்த சில குதிரைகள் வந்தன. அதிலிருந்து சீக்கு பரவி, நோய் தாக்குதலில் இறந்துவிட்டது. படத்தை முடித்து விட்டு தான் அலெக்ஸ் இறந்தது. ரொம்ப நாள் எங்களுக்கு சம்பாதித்து கொடுத்த குதிரை. இறக்கும் கடைசி நாளில் கூட பிரசாத் ஸ்டூடியோவில் சூட்டிங் போய் விட்டு வந்து தான் இறந்தது. கடைசி வரை உழைத்து கொடுத்தது. அலெக்ஸ் என்றால் சினிமாவில் எல்லாருக்கும் தெரியும். 


கேப்டன் பிரபாகரனில் மன்சூர் அலிகான், விஜயகாந்த் ஆகியோரும் அலெக்ஸை தான் பயன்படுத்தினர். 3 வயதில் அலெக்ஸை வாங்கினேன். முதல் படம் சிரஞ்சீவி படம். 100 நாட்கள் ஓடியது. அதன் பின் நிறைய படம். கருப்பு ரோஜா, கருப்பு நிலா போன்ற பல படங்கள். அதிலிருந்த அலெக்ஸ் என்றால் இன்டஸ்ட்ரியில் நல்ல பெயர். 3 வயதில் வாங்கி, 27 வருடம் எங்களுக்குஉழைத்து கொடுத்தது. 




திடீர்னு கொரோனா மாதிரி சளியாக மூக்கில் வந்தது. அப்படியே இறந்துவிட்டது. குதிரை வாங்குவதில் வயது முக்கியம். 3 வயதுள்ள குட்டியாக தான் வாங்க வேண்டும். பஞ்சாய், ராஜஸ்தானில் ஆண்டு தோறும் குதிரை சந்தை நடக்கும். அங்கு சென்று தான் குதிரைகள் வாங்குவோம். வாங்கி வந்து, நாங்கள் ட்ரெய்னிங் கொடுப்போம். பொன்னியின் செல்வனில் கார்த்தி பயன்படுத்தியதும், சரத்குமார் பயன்படுத்தியதும் ஒரே குதிரை தான். அது அலெக்ஸ் தான். அலெக்ஸிடம் நீங்கள் கமெண்ட் செய்தால் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளும். பழசிராஜா, சூரியன் போன்ற படங்களில் ஏற்கனவே சரத்குமார் அலெக்ஸ் உடன் நடித்திருந்தார். அதனால், அவருக்கு ஏற்கனவே நல்ல பழக்கம் இருந்தது,’’


என்று அந்த பேட்டியில் தமிழரசன் கூறியுள்ளார்.