Mahavishnu Speech in School: சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற வகையில் மஹா விஷ்ணு என்பவர் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் என்னதான் பேசினார்? பார்க்கலாம்.
’’பாவத்தையும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்க்காமல் எப்படி பொருளீட்டுவது என்பது இன்றைய புத்தகங்களில் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு என்ற திருக்குறள் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த ஒரு குறளுக்கு உண்மையான விளக்க உரை தெரிந்திருந்தால் வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டியது எதுவுமே இல்லை. திருவள்ளுவர் உலகின் அனைத்து ரகசியங்களையும் இதில் பூட்டி வைத்துள்ளார்.
நீ செய்யும் செயலுக்கு நீயே பெருமை உணர்வு அடைந்தால், மீண்டும் பிறப்பாய். நீ செய்யும் செயலுக்கு இறைவனை காரணம் கூறும்போது பாவம் புண்ணியம் என்ற இரு வினைகளும் உங்களை சேராது.
அடுத்த பிறவி கொடூரமாக இருக்கும்
எப்படியாவது வாழ்ந்து எப்படியாவது இறந்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அடுத்த பிறவி கொடூரமாக இருக்கும். இப்போது பலர் கை இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். கண் இல்லாமல் பிறக்கிறார்கள். பல நோய்களுடன் பிறக்கிறார்கள். இறைவன் ஏன் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைக்கவில்லை? ஒருவன் கோடீஸ்வரனாக, இன்னொருவன் ஏழையாக இருக்கிறான். ஒருத்தன் நல்லவனாக இருக்கிறான். ஒருத்தன் கிரிமினலாக இருக்கிறான். ஏன் இந்த மாற்றம்?
ALSO READ | Mahavishnu: காமெடியன் டூ குருஜி; அமைச்சர்களுடன் நெருக்கம்- யார் இந்த பரம்பொருள் மகாவிஷ்ணு?
அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாதா?
போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது? அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா? முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவு பெற்றவரா? பாவம், புண்ணியத்தைப் பற்றி போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?
பாவ, புண்ணியத்தை பற்றி போதிக்காமல் இருந்தால் ஒருவன் நிறைய பாவங்களைச் செய்வான். பிற உயிர்களுக்கு நீ செய்யும் சேவையே ஆன்மீகம். அதைத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இவ்வளவு நாள் உங்களால் கற்பிக்க முடியாத கல்வியை, ஞானத்தை நான் போதிக்கிறேன் என்றால் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்படி என்னிடம் சண்டைக்கு வரலாம்?
மலத்தில் ஊறும் புழுவாக
நீ அதிகமாக பாவம் செய்தால் மலத்தில் ஊறும் புழுவாக பிறப்பாய் என்று திருமூலர் திருமந்திரத்தில் எழுதுகிறார். திருமூலரை தாண்டி ஞானம் யாருக்காவது இருக்கிறதா? தெளிவு யாருக்காவது இருக்கிறதா? உங்களுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை? உண்மை என்றால் என்ன? தர்மம், சத்தியம் என்றால் என்ன? நியாயம், கருணை என்றால் என்ன?
மாணவர்களே.. உங்களுக்கு மெய்ஞானத்தை உள்ளுக்குள் இருக்கும் ஞானகுருவே போதிக்க முடியும். நிம்மதியாக வாழ வேண்டும், கர்ம வினைகளை கடந்து வாழ வேண்டும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வாழ்வியல் கல்வி முக்கியம்.
வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது, மத்தக படிப்பையும் படிக்க வேண்டும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். மத்தக படிப்புக்கான நுழைவு வாயில் என்று ஒன்று இருக்கிறது அதை எப்படி தெரிந்து கொள்வது? பேச வருபவனை எல்லாம் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள். யார் உங்களுக்கு மெய்ஞானத்தை போதிக்க முடியும்?
பேச தயங்கியதால்தான் என் நாடு நாசமாய் போனது
இதை பேச தயங்கியதால்தான் இவ்வளவு பிரச்சனை. இதை பேச தயங்கியதால்தான் என் நாடு நாசமாய் போனது. வீணாய்ப் போனது. இந்தியா முழுவதும் மூன்று லட்சத்து 23 ஆயிரம் குருகுலங்கள் இருந்தன அவை அனைத்தும் அழிக்கப்பட்டன.
ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும். இங்கிருந்து அங்கே பறந்து செல்ல முடியும். அத்தனையும் ரகசியங்களையும் பனை ஓலையில் முன்னோர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்றனர். ஆங்கிலேயர்களின் சதி வேலை காரணமாக நம் மக்களின் ஞானம் மண்ணோடு மண்ணாக புதைந்தது.
இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் நாளந்தாதான் முதல் பல்கலைக்கழகமா? நம் நாட்டில் இருந்த ஏராளமான ஞானிகள் பற்றி தெரியுமா?
சத்தியத்தை பற்றி மட்டுமே பேசுவேன்
நான் சத்தியத்தை பற்றி மட்டுமே பேசுவேன். ஆசிரியர்களுக்கும் ஞானக்கல்வி தேவைப்படுகிறது மனிதனை முன்னிறுத்துவதை நிறுத்திவிட்டு மனிதனை கடந்த சக்தியை எப்போது ஒருவன் முன்னிறுத்துகிறானோ, அப்போதுதான் பணிவு, தன்னடக்கம் ஆகியவை வரும். வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் என்றால், பாவம் என்ன புண்ணியம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். அதைத் தெரிந்துகொள்ளவில்லை எனில் மீண்டும் மீண்டும் கஷ்டத்தை அனுபவித்துதான் ஆக வேண்டும்’’.
இவ்வாறு மஹா விஷ்ணு தெரிவித்து இருந்தார்.