ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுபவர் என்ற பெயரில், அரசுப் பள்ளிகளில் மூடநம்பிக்கை உரையாற்றியதாக மகா விஷ்ணு என்பவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோரைச் சந்தித்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் யார் இந்த மகா விஷ்ணு என்று பார்க்கலாம்.
முதன்முதலில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக சன் தொலைக்காட்சியில் ’அசத்தப் போவது யாரு?’ நிகழ்ச்சியில் மதுரை மகா என்ற பெயரில் சிறுவனாகக் கலந்துகொண்டவர் மகா விஷ்ணு. தற்போது குருஜியாக அறியப்படுகிறார். பரம்பொருள் என்ற பெயரில் திருப்பூர் மாவட்டத்தில், தனியார் ஆன்மிக அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
தனது யூடியூப் பக்கத்தில் குருஜி மகா விஷ்ணுவாக அறியப்படும் இவர், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு நேரடியாகச் சென்று ஆன்மிக வகுப்புகளை எடுத்து வருகிறார். இந்த நாடுகள் அனைத்திலும் தனியாக அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
இயக்குநர், பேச்சாளர், எழுத்தாளர்.. நீளும் அறிமுகங்கள்
மகா விஷ்ணு, ரெய்க்கி ஹீலர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். திரைப்பட இயக்குநர், தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மிகவாதி, மன நல ஆலோசகர் என்றும் தன்னைத்தானே குறிப்பிட்டுள்ளார்.
தெரு நாய்களுக்கு உணவு, மரக் கன்று நடுதல், கண் முகாம், அன்னதானம் உள்ளிட்ட சமூக சேவைகளிலும் ஈடுபடுவதாக பரம்பொருள் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
போதனை வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்
அதேபோல பரம்பொருள் யூடியூப் பக்கத்தில், ஜீவ சஞ்சீவினி, வஜ்ர தேகி, பஞ்சமுகி ருத்ராட்ச மாலை, வள்ளலார் ஞான மூலிகை என நிறைய பொருட்களையும் மகா விஷ்ணு விற்பனை செய்து வருகிறார். அதேபோல ஆன்மிக போதனை வகுப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் பக்கத்தில் இருப்பது என்ன?
வள்ளலார் மரணத்தில் மர்மம், பேய்கள், மறு பிறவி, ஞானம், காமம் என வெவ்வேறு தலைப்புகளில் வீடியோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மகா விஷ்ணு, ’பைலட்டாக மாறிய மகா விஷ்ணு’ என்றெல்லாம் வீடியோக்களைப் பதிவிட்டிருக்கிறார். ’சூரியனுக்குச் சென்ற மகா விஷ்ணு’, ’வயநாடு பேரழிவுக்கு என்ன காரணம்?- என்று சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் போட்டிருக்கிறார்.
தமிழக பாடத்திட்டங்களில், வள்ளலாரின் திருவருட்பாவைச் சேர்க்க வேண்டும் என கோரிக்கையோடு, அமைச்சர் அன்பில் மகேஸைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பிற அமைச்சர்களையும் இதே காரணத்துக்காகச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த அறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளிகள் குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் போதனை வகுப்புகளை நடத்தி வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களை, தனது யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றி வருகிறார் மகா விஷ்ணு. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.