தமிழ்நாட்டில் மக்கள் பயணம் செய்வதற்காக ரயில்களை காட்டிலும் பேருந்துகளையே பெரும்பாலும் தேர்வு செய்து வருகின்றனர். ரயில்களில் சாதாரண பெட்டிகள் குறைவாக இருப்பதும், ரயில் டிக்கெட்டுகள் உடனடியாக கிடைக்காமல் போவதுமே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.



முன்பதிவில் புது வரலாறு:


தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.


இதற்காக மக்கள் இணையதளம் மூலமாகவும், நேரில் சென்றும் பேருந்துகளை முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள் என விசேஷமும், விடுமுறையும் தொடர்ந்து வந்த காரணத்தால் கடந்த 4ம் தேதி மட்டும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 140 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.


6 ஆண்டுகள் சாதனை முறியடிப்பு:


தமிழக அரசுப் போக்குவரத்து கழக வரலாற்றிலே ஒரே நாளில் அதிக பயணிகள் முன்பதிவு செய்தது இதுவே ஆகும். இதற்கு முன்பு, கடந்த 2018ம்் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12ம் தேதி 32 ஆயிரத்து 910 பயணிகள் முன்பதிவு செய்ததே இதுவரை ஒரே நாளில் நடைபெற்ற அதிகபட்ச முன்பதிவாக இருந்தது.


6 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சாதனை நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி விடுமுறை உள்ளிட்டவை காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க நவீன வசதிகள் கொண்ட பேருந்துகளை வெளியூர்களுக்கு அதிக பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.