கனமழை எச்சரிக்கை காரணமாக தனது நடைபயணத்தை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டி வருகிறது. அதற்கேற்றவாறு தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி ராமநாதபுரத்தில், “என் மண்..என் மக்கள்” என்ற பெயரில் இந்த நடைபயணமானது தொடங்கியது. தமிழ்நாட்டில் 5 பகுதியாக நடக்கும் இந்த நடைப்பயணத்தில் 234 தொகுதிகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி அண்ணாமலை தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறது. நடுவில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு ஆகிய சில காரணங்களால் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. 






இப்படியான நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அந்தமான் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்குக் வெகு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பாஜக சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு கருதி, #EnMannEnMakkal நடைபயணம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. டிசம்பர் 6 முதல், மீண்டும் நடைபயணம் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயண விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அண்ணாமலை தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் செல்லும் இடமெங்கும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வதோடு, மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தும் வருகிறார். இதனிடையே அண்ணாமலையின் நடைபயணமானது நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.