சென்னைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட தொலைதூரப் படிப்புகளில் சேர இன்று (ஜூலை 5) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொலைதூரப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள
http://online.ideunom.ac.in/newone/registrationsteps.html என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 


எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இதில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.


குறிப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 5) தொடங்கியுள்ளது. 


ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 64 கற்றல் உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதேபோல ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்பக் கட்டணம் 236 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பக் கட்டணம் 224 ரூபாயாக உள்ளது. (ஜிஎஸ்டி கட்டணம் உள்பட)


இங்கு பி.ஏ., பி.காம், பி.எஸ்சி., பி.சி.ஏ.,பி.லிட். உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, 10-க்கும் மேற்பட்ட டிப்ளமோ  படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல முதுநிலைப் படிப்புகளில் சேர, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதமாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


தேர்வர்கள் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மற்றும் மெரிட் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு: IDE தொலைதூரக் கல்வி கட்டிடம், சேப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600005
தொலைபேசி எண்: 044 2561 3716


இணைய முகவரி: www.ideunom.ac.in 


சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள
http://online.ideunom.ac.in/newone/registrationsteps.html என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


மாணவர் சேர்க்கை குறித்த தகவலேட்டை முழுமையாகக் காண http://online.ideunom.ac.in/newone/Propectus/ug_eligibility_courses.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும் . 


விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்ய http://www.ideunom.ac.in/pdf/2223/UGPGDIPLOMA_Downloaded.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.