சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை அனைத்துலக தொடர்புகள் பாடப் பிரிவு மூடப்படுவதாக எழுந்த தகவலை அடுத்து, அங்குள்ள மாணவர்களும் ஏஐஎஸ்எஃப் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை 'அனைத்துலக தொடர்புகள்' (M.A. International Relations) எனும் பாடப் பிரிவு வரும் 2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் மூடப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் அறிவியல் துறையின் கீழ் கடந்த பத்தாண்டுகளாக இந்த பாடப் பிரிவு வழங்கப்பட்டு வந்தது. பாடம் நிறுத்தப்படுவது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அனைத்து தமிழ்நாடு மாணவர்கள் சங்கத்தின் (ஏஐஎஸ்எஃப் ) செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
’’அரசியல் அறிவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான உமா மகேஸ்வரி திடீரென அனைத்துலகத் தொடர்புகள் எனும் பாடப்பிரிவினை மூட வேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதை பரிசீலித்த பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாண்டு முதல் அனைத்துலக தொடர்புகள் எனும் பாடப்பிரிவினை மூட அனுமதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டுக்கு 150 மாணவர்களுக்கு மேல் விண்ணப்பித்த நிலையில், அதில் இருந்து 20 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகம் இடமளித்து வந்தது.
தனியார் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இதே பாடப் பிரிவினை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டுப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.4000/- -ல் இந்தப் படிப்பைப் பயில முடியும்.
பல்கலைக்கழக நிர்வாகம் இப்பிரிவை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மூடுவது என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் கேடாக அமையும். அத்தோடு, பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாடப்பிரிவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிட்டு, முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தாரைவார்க்க செய்யும் திட்டமும் இருப்பதாகத் தெரிகிறது.
முதுகலை அனைத்துலக தொடர்புகள் எனும் பாடப்பிரிவை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் இன்று (மே 11) மதியம் சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் போராட்டம் நடத்தி உள்ளோம்’’.
இவ்வாறு அனைத்து தமிழ்நாடு மாணவர்கள் சங்க செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.