சமூக நீதி பற்றி அரசு பேசும் நிலையில், அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


அண்மையில் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச் சாராயத்தை அருந்தி, 67 பேர் பலியான நிலையில், கள்ளக்குறிச்சிக்கு அருகில் உள்ள கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்


இந்த நிலையில், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு பற்றிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் முன்னிலையில் ஜூலை 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வராயன் மலைப் பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அல்லது அமைச்சர் உதயநிதி ஆய்வுப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொடர்ந்து, மீண்டும் இன்று விசாரித்த நீதிபதி சுப்பிரமணி, ’’சமூக நீதி பற்றி அரசு பேசும் நிலையில், அரசு பழங்குடியினர் பள்ளி என அழைப்பது ஏன்? அரசுப் பள்ளி என மட்டும் அழைக்கலாமே?


அரசுப் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும்


21ஆம் நூற்றாண்டிலும் அரசு பழங்குடியின நல பள்ளிகள் என அழைப்பது வேதனை தருகிறது. தெருக்களில் சாதிப் பெயர் நீக்கப்பட்டது போல, அரசுப் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும்.


மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளுக்கு எதற்கு சாதிப் பெயர் இருக்க வேண்டும்?’’ என்று நீதிபதி சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் கல்வராயன் மலைப் பகுதிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 


நீதிபதி சந்துரு ஆய்வறிக்கை


இதற்கிடையே பள்ளிகளில் வன்முறை, சாதி மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  இதில், பள்ளிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.