ஓய்வூதியம் பெற இப்போதெல்லாம் அரசாங்க வேலை பார்த்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. யாராக இருந்தாலும் சரி, கொஞ்சம் முன்யோசனையுடன் நல்ல காப்பீட்டு நிறுவனத்தின் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து கொண்டால் போதும், முதுமையை கண்ணியமாகக் கடக்கலாம். அதுவும் நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் திட்டம் என்றால் கூடுதல் நம்பிக்கை வரத்தானே செய்யும்.
எல்ஐசியின் பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவைப் (LIC Pradhan Mantri Vaya Vandana Yojana) பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
எப்படி பெறுவது?
இத்திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கானது. 60 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு திருத்தப்பட்ட விகிதத்தில் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் இந்த பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவை எந்தவித மருத்துவப் பரிசோதனையும் இல்லாமல் வாங்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதில் இணைவோருக்கு 10 ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் உறுதியளிக்கப்படுகிறது. முதலீட்டுப் பணத்துக்கு ஆண்டுக்கு 7.40 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைய நேரடியாக எல்ஐசி அலுவலகம் செல்லலாம் அல்லது வீட்டிலிருந்தபடியே எல்ஐசியின் இணையதளம் வாயிலாக பயன்பெறலாம்.
எது மாதிரியான திட்டம்
இத்திட்டத்தில் சேர 2023 மார்ச் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நாம் செலுத்தி இணைந்து கொள்ளலாம். திட்டத்தின் கொள்முதல் விலையை சந்தாதாரரே நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில், சற்றே கனமான தொகை என்றால் கூடுதல் லாபம் பெறலாம்.
அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் 10 ஆண்டு பாலிசி காலத்திற்கான ஓய்வூதிய பேமெண்ட்டுகளை இந்த திட்டம் வழங்குகிறது, பத்தாம் ஆண்டின் இறுதியில் கொள்முதல் விலை ரிட்டர்ன் செய்து கொள்ளலாம்.
அதேபோல், ஓய்வூதியத் தொகையையும் வாடிக்கையாளரே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஓய்வூதியப் பேமெண்ட்டுகளை, சந்தாதாரர் மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என்ற எந்த அடிப்படையில் வேண்டுமானாலும் பெறலாம். ஒருவேளை, சந்தாதாரர் உயிரிழக்கும் பட்சத்தில், திட்டத்தின் கொள்முதல் விலை சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு திருப்பி அளிக்கப்படும்.
ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
இத்திட்டத்தில் இணைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்த பின்னர், கொள்முதல் விலையில் 75 சதவீதம் தொகையை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில், குறைந்தபட்சமாக ரூ.1000 ஓய்வூதியத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 9,250 ஓய்வூதியம் வரைப் பெறலாம். முதுமையில் இனிமை சேர்க்க இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்கள் நிச்சயமாகக் கைகொடுக்கும்.
எனவே முதுமையில் உதவும் இது போன்ற ஓய்வூதிய திட்டங்களை தேர்வு செய்து பயன்பெறுங்கள்.