வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க 'மொழிகள்' என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மொழிகள் ஆய்வகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் .
இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று தலைமையுரை ஆற்றினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்புரை ஆற்ற, மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பள்ளிக் கல்வித் துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது 'மொழிகள்' திட்டம்.
இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது. எழுத்துக்களில், வாக்கிய அமைப்பில், உச்சரிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துகிறது. இரு நண்பர்கள் சேர்ந்து விளையாட்டு முறையில் மொழியை கற்றுக்கொள்ளலாம்.
2023- 2024ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே இயங்கி வரும் 6029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை இனி மொழி ஆய்வகங்களாகவும் செயல்பட ஏற்ப செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில மொழியைக் கண்டு அஞ்சும் மாணவர்களைச் சரளமாகப் பேசவும் பதிலளிக்கவும் கலந்துரையாடவும் ஏற்ற தளமாகவும் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் பேசுவதற்கும், பொருள் பரிந்து படிக்க உதவும் கருவியாகவும் மொழி ஆய்வகங்கள் செயல்படவுள்ளன.
மாணவர்களுக்கான எளிய கற்றல் முறைகளான கதைகள், நிகழ்வுகள். செயல்பாடுகள், உரையாடல்கள், வினாக்கள் கேட்டல் போன்றவற்றின் வாயிலாக மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வர். தவறாகப் பேசிவிடுவோமோ என்ற அச்சத்தில்தான் இங்கு பல மாணவர்கள் பேசுவதைத் தவிர்க்கின்றனர். தன் உச்சரிப்பைத் தானே உடனுக்குடன் சரிபார்த்துக்கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) வசதியுடன் மொழி ஆய்வகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரின் கற்கும் திறனும் வேகமும் மாறுபடும். எனவே தத்தம் கற்றல் திறனுக்கேற்ப நிலைகளையும் வகுத்து ஆரம்ப நிலை, இடைப்பட்ட நிலை மற்றும் உயர்ந்த நிலை என மூன்று நிலைகளாக இப்பயிற்சியைத் தேவைப்படும் நேரத்தை எடுத்துக்கொண்டு இயல்பாகக் கற்க இம்மொழி ஆய்வகம் உதவிசெய்கிறது.
மொழியை இலக்கணக் கூறுகளோடு தவறின்றிக் கற்பதும் சக மாணவர்களோடு இணைந்து கற்பதும் மொழி ஆய்வகத்தில் சாத்தியமாகிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
ஒவ்வொரு நிலையிலும் முழுமையான கற்றல் நிகழ்ந்தபின் சுய மதிப்பீடு செய்துகொள்ளலாம். இது வழக்கமான மதிப்பீட்டு முறை போலில்லை. ஒரு முறை தவறு ஏற்பட்டாலும் தானே மீண்டும் முயற்சித்து சரியாகச் செய்வதால் மாணவர்களின் கற்கும் ஆர்வம் மேம்படும். இம்மொழி ஆய்வகங்களில், ஒரே நேரத்தில் 89,680 மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைவர்.
ஆங்கிலத்தையும் தமிழையும் கற்று தங்கள் சொல் வளத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய தொடர்புகளுக்காக நம் அரசுப் பள்ளி மாணவர்கள் தயாராவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.