பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 28ஆம் தேதி லட்சக்கணக்கான ஆசிரியர்கள் திரண்டு கோட்டையை முற்றுகை இட உள்ளதாகவும் முதல்வரைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. 


இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று கூறி உள்ளதாவது:


’’ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, கடந்த 2017 முதல்‌ செயல்பட்டு வருகிறது. 2021-ல் திமுக அரசு ஆட்சிப்‌ பொறுப்பேற்றதும்‌, ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- அரசுப்‌ பணியாளர்களின்‌ கோரிக்கைகள்‌ அனைத்தும்‌ நிறைவேற்றப்படும்‌ என்ற நம்பிக்கையானது பொய்த்துப்‌ போனது.


மத்திய அரசு அறிவிக்கும்‌ அகவிலைப்படி உயர்வானது மூன்று தவணைகளாக நிலுவைத்‌ தொகை மறுக்கப்பட்டு, காலந்தாழ்த்தி வழங்கப்பட்டு, தற்போதுதான்‌ கடந்த 1.7.2023 முதல்‌ ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படி உயர்வினை அதே தேதியில்‌ தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.


ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- அரசுப்‌ பணியாளர்கள்‌ தொடர்பாக தேர்தல்‌ காலத்தில்‌ அளித்த வாக்குறுதிகள்‌ ஒன்றைக்‌ கூட, ஆட்சிப்‌ பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள்‌ கடந்த பின்னரும்‌, நிறைவேற்றுவது குறித்து எந்தவித வாக்குறுதியும்‌ வழங்கவில்லை.


பல்வேறு கட்ட இயக்க நடவடிக்கைகளை ஜாக்டோ ஜியோ மேற்கொண்ட சூழ்நிலையில்‌, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்‌‌ தலைமையில்‌ நிதியமைச்சர்‌ மற்றும்‌ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ ஆகியோர்‌ அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியும்‌, வாழ்வாதார கோரிக்கையான மீண்டும்‌பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து மெளனம்‌ காத்து வருகிறது.


இந்தக்‌ கோரிக்கையினைத்‌ தவிர, ஜாக்டோ ஜியோ ஏனைய கோரிக்கைகளை, தேர்தலில்‌ அளித்த வாக்குறுதியின்‌ அடிப்படையில்‌ நிறைவேற்றிட வேண்டும்‌ என்று தமிழக அரசிடம்‌ கோரி வருகிறது.


மேற்சொன்ன சூழ்நிலையில்‌, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌-உயர்மட்டக் குழுக்‌ கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த முடிவின்‌ அடிப்படையில்‌, வரும்‌ 28.12.2023 அன்று இலட்சக்கணக்கான ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- அரசுப்‌ பணியாளர்கள்‌ சென்னையில்‌ சேப்பாக்கம்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை அருகே அணிதிரண்டு, கோட்டை முற்றுகை இயக்க நடவடிக்கையினை மேற்கொண்டு, தலைமைச்‌ செயலகத்தில்‌ தமிழ்நாடு முதல்வரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப்‌ பேசி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்‌ என்று தமிழக முதலமைச்சரை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌’’.


இவ்வாறு ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.