கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச் 27ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆஃப்லைன் முறையில் ஏப்ரல் 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு ஆரம்பிக்கிறது.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது.
1250 பள்ளிகள்
இந்தியா முழுவதும் மொத்தம் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாட்டில் 3 பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
முன்னதாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே, கே.வி., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையில், 2020 புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 5 ஆக இருந்த குறைந்தபட்ச வயது, 6 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி 1ஆம் வகுப்பில் சேர மார்ச் 31ஆம் தேதி அன்று 6 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.
மார்ச் 27 முதல் விண்ணப்பப் பதிவு
இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச் 27ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இவர்கள் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 7 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆஃப்லைன் முறையில் ஏப்ரல் 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு ஆரம்பிக்கிறது. நேரடி முறையில் நடைபெறும் இந்த விண்ணப்பப் பதிவுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் பட்டியல் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு நீங்கலாக அனைத்து வகுப்புகளுக்குமான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 30ஆம் தேதி கடைசி ஆகும்.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.