தெலுங்கு, கன்னடம் மொழி பேசுபவர்களின் புத்தாண்டான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.


இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் வாழ்த்தில்,” உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே பரந்து வாழும் திராவிட மொழிக்குடும்பத்து மக்களான நமது ஒற்றுமையும் உறவும் வலுப்பெறட்டும்!’ என்று தெரிவித்துள்ளார்.


உகாதி பண்டிகை


தெலுங்கு காலண்டரின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ’யுகாதி’(Ugadi) எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மார்ச் 22-ம் தேதி (புதன்கிழமை) தெலுங்கு புத்தாண்டு(Telugu New Year) கொண்டாடப்படுகிறது.


ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது.ஒடிசாவில்  இது  ‘பனா சங்க்ராந்தியாக’ அழைக்கப்படுகிறது.  மேற்கு வங்கத்தில், ‘பொய்லா  பாய்சாக்’ புதிய ஆண்டில் தொடங்குகிறது  மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹூ’ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால்,  இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன. 


பிரதமர் நரேந்திர மோடி 


உகாதி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது :“அனைவருக்கும் உகாதி தின நல்வாழ்த்துகள்.”


எடப்பாடி பழனிசாமி


பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளாகக் கருதப்படும் யுகாதி திருநாளை கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இனிய யுகாதி_திருநாள் நல்வாழ்த்துகள். இந்நன்னாளில்,அனைவரும் இன்னல்கள் நீங்கி,வளமும்-நலமும் பெற வாழ்த்துக்கள்.


யுகாதி வரலாறு, முக்கியத்துவம்:


யுகாதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான யுகா (வயது) மற்றும் ஆதி (ஆரம்பம்) என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது பொருளாகும். இது இந்து சந்திர நாட்காட்டி மாதமான சைத்ராவின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. இந்த நாளில்தான் பிரம்மா பூமியின் பகுதிகளை உருவாக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. 
 
யுகாதி அன்று மொரீஷியஸ் நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கு கணிசமான அளவு இந்துக்கள் வாழ்வதால் யுகாதிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.