கே.வி. எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப் பதிவு நாளையுடன் முடிவடைகிறது. 


மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி வழங்கும் நோக்கத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக இந்தியா முழுவதும் இந்த கே.வி. பள்ளிகள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. 


கே.வி. பள்ளிகளில் சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் பெற்றோருக்கு ஒரு தனி குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த எண் மூலமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 


இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை


மாணவர் சேர்க்கையில், 15 சதவீதம் பட்டியலின மாணவர்களுக்கும் 7.5% பழங்குடி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரீமி லேயர் அல்லாத பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 3 சதவீதம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெற்றோர்கள் நாளை (ஏப்ரல் 13-ம் தேதி) மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம். இதற்குக் குழந்தைகளின் வயது மார்ச் 31, 2022-ன்படி, 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 8 வயது வரை இருக்கலாம். ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்த குழந்தைகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


புதிய கல்விக் கொள்கையின்படி 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல், 1ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவனுக்கு, மார்ச் 31ஆம் தேதி அன்று 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 




விண்ணப்பிப்பது எப்படி?


* kvsonlineadmission.kvs.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து கொள்ளவும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் பதிவு லிங்க்கை க்ளிக் செய்யவும்.
* கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கவும்.
* கே.வி. சேர்க்கை விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
* தேவையான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்யவும்.
* சப்மிட் பொத்தானைச் சொடுக்கவும்.
* கேந்திரிய வித்யாலயா சங்கதன் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.  


தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் https://kvsangathan.nic.in/sites/default/files/Admission%20Guidelines_1.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விதிமுறைகளை அறிந்துகொள்ளவும். 


பள்ளிகளில் சேர்க்கை பெற விண்ணப்பிக்க https://kvsonlineadmission.kvs.gov.in/instruction.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.