ஐடிஐ மாணவிகளுக்கு, 2 நாட்கள் பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னோடி மாநிலம் கேரளா
கேரள மாநிலம் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்தின் உயர் கல்வித்துறை கடந்த ஆண்டு, மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பை அறிவித்தது. உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல பாலின சமத்துவ பள்ளி சீருடைகளும் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் நேற்று ஐடிஐ (Industrial Training Institutes - ITIs). மாணவிகளுக்கு மாதம் தோறும் 2 மாதவிடாய் விடுமுறை அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறும்போது, "பாரம்பரியமான உழைப்பு மிகுந்த பணிகளில்கூட, மாணவிகள் அதிகளவில் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் பல திறன்- பயிற்சித் திட்டங்களின் உடல் ரீதியாக தேவைப்படும் தன்மையை அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக உள்ளனர்
இன்றைய காலகட்டத்தில், பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக, சுறுசுறுப்பாக உள்ளனர். இதில் உடல் ரீதியாக மிகவும் திறன் தேவைப்படும் பயிற்சித் தொழில்களும் அடங்கும். இந்த காரணிகளை கணக்கில் கொண்டு, பெண் பயிற்சியாளர்களுக்கு (மாணவிகளுக்கு) ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.
கேரளா முழுவதும் நூற்றுக்கணக்கான ஐடிஐ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர். கூடுதலாக இவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும் இத்தகைய திட்டங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும்
அதே நேரத்தில் விருப்பம் கொண்ட மாணவிகள், பயிற்சிகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் பிற கல்வி சாரா இணை செயல்பாடுகளில் ஈடுபடலாம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த முன்னோடி முயற்சிகளுக்குப் பெண்களும் கல்வியாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும் இத்தகைய திட்டங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாம்: AICTE Scholarship: கல்லூரி மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவிக்கொகை; அள்ளித்தரும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி?