கேந்திரிய வித்யாலயா(Kendriya Vidyalaya) பள்ளி மாணவர் சேர்க்கையில் எம்.பி.க்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், புதிதாக சில பிரிவுகளின்கீழ் மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 


நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1,245 கே.வி. பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 


இதில் பல்வேறு தரப்பினரும் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் க்கு முன்னதாக, ஒரு எம்.பி., ஒரு கல்வியாண்டில் இரண்டு மாணவர்களைச் சேர்க்கைக்குப் பரிந்துரை செய்யலாம் என்று விதிமுறை இருந்தது. இது 2011-ல் ஐந்து, 2012-ல் ஆறு, 2016-ல் 10 என அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் எம்.பி.க்கள் ஒவ்வொரும் தற்போது 10 இடங்களுக்கு மாணவர்களைப் பரிந்துரை செய்யலாம் என்ற நிலை இருந்தது.


தற்போது ​​மக்களவையில் 543 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களும் என மொத்தம் 788 பேர் உள்ளதால், 7,880 பேருக்கான சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.


அதேபோல மேலும் சில மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு விதிமுறைகளை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


யாருக்கெல்லாம் சிறப்பு ஒதுக்கீடு?


புதிதாக பிஎம் கேர்ஸ் திட்டத்தின்கீழ் கொரோனா வைரஸால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் படிக்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 


மாவட்ட மாஜிஸ்திரேட் அளிக்கும் பட்டியலின்படி, ஒவ்வொரு கே.வி. பள்ளியிலும் அதிகபட்சமாக 10 குழந்தைகளை அனுமதிக்க முடியும். 2022-23ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


* எனினும் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, ஷெளர்ய சக்ரா உள்ளிட்ட தேசிய வீரதீர விருதுகளைப் பெற்றவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு ஒதுக்கீடு அப்படியே உள்ளது. 


* அதேபோல இந்திய உளவுப் பிரிவு அமைப்பான ரா (RAW) ஊழியர்களின் குழந்தைகள் 15 பேர், பணியில் இருக்கும்போது உயிரிழந்த மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் ஆகியோருக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 


* ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடர்ந்து பின்பற்றப்பட உள்ளது.


* நுண் கலைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஒதுக்கீடும் அப்படியே உள்ளது.


* ராணுவம், விமானப் படை, கப்பற்படை, கடலோர காவல்படையைச் சேர்ந்த பாதுகாப்புப் படை சார்பில் தலா 6 இடங்கள் வழங்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு பொருந்தாது. 


* புதிய விதிமுறைகளின்படி, நாடு முழுவதும் உள்ள கே.வி.பள்ளிகளில் 60 இடங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்றோருடன் திரும்பும் குழந்தைகளுக்கெனத் தனியாக ஒதுக்கப்படும். அவர்களுக்கு நவம்பர் 30 வரை சேர்க்கை வழங்கப்படும். 


* காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு சேர்க்கை வழங்கப்படும். 




என்னென்ன ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டன?


* கல்வி அமைச்சக ஊழியர்களின் குழந்தைகள், எம்.பி.க்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள், ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் குழந்தைகள் என மொத்தம் 100 பேருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 


* முன்னதாக ஒரு மாவட்ட மாஜிஸ்திரேட், தன்னுடைய அதிகார ஒதுக்கீட்டின்கீழ் 17 மாணவர்களைப் பரிந்துரைக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டது.


* மத்தியக் கல்வி அமைச்சரின் விருப்பத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த 2021-22ஆம் கல்வி ஆண்டில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.