கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால், தமிழ் திரையுலகம் பல கலைஞர்களை இழந்தது. அவர்களுள் ஒருவர்தான் இயக்குநர் தாமிரா. அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவருக்கு திரைத்துறையினர் பலரும் முதலாம் ஆண்டு அஞ்சலியை சமூக வலைத்தளங்கள் வாயிலாக செலுத்தி வருகின்றனர்.



பாலச்சந்தர் , பாரதிராஜா உள்ளிட்ட மிகப்பெரிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து , கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக  ரெட்டை சுழி என்னும் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் தாமிரா.அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ஆண் தேவதை என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக தனது மூன்றாவது படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில்  தாமிரா ஈடுபட்டிருந்த சமயத்தில்தான் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு , அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்தார். 20 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தும்  பலனில்லாததால் கடந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி உயிரிழந்தார். 




தாமிரா 8 ஆண்டுகள் இயக்குநர்  கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பாலச்சந்தரின் இறுதி படைப்பான பொய் என்னும் திரைப்படத்திற்கு வசனம் எழுதியது தாமிராதான். இது தவிர அண்ணி, மனைவி உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் பிறந்த தாமிராவின் இயற்பெயர் ஷேக் தாவூத். விலங்கியலில் இளநிலை அறிவியல் பட்டம்  பெற்ற பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இயல்பாகவே கலை , இலக்கியம் மீது பற்றுக்கொண்டவர் தாமிரா. கனவுகளை சுமந்துக்கொண்டு சென்னை வந்த இவர் சில சினிமா இதழ்கள் , வார இதழ்களில் கட்டுரை எழுதிவந்தார். சிறந்த எழுத்தாளர் என பாராட்டப்படும் தாமிரா , சிறுகதைகள் எழுதும் பொழுது தான் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவாக , அங்கு ஓடும் தாமிர பரணி ஆற்றின்  முதல் பகுதியை எடுத்துக்கொண்டு , தாமிரா என புனைப்பெயராக்கிக்கொண்டார்.




 


தான் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக , ஏப்ரல் 11ஆம் தேதி  கடைசியாக தனது சமூக வலைத்தள பக்கமான  ஃபேஸ்புக் பக்கத்தில்,"இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை.
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்"   என பதிவு செய்திருந்தார். தாமிராவின் அந்த இறுதி பதிவு பலரையும் கலங்க செய்தது.