கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் எம்.பி.க்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, கே.வி. பள்ளிகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், சேர்க்கைக்கான ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டை அனுமதிக்கும் சிறப்புத் திட்டத்தை 1975-ல் அறிமுகப்படுத்தியது.
இந்த ஒதுக்கீட்டின்படி ஒரு எம்.பி. குறிப்பிட்ட மாணவர்களை சேர்க்கைக்குப் பரிந்துரைக்கலாம், ஆனால் இந்த பரிந்துரைகள் 1 முதல் 9 வகுப்புகள் வரை பொருந்தும். மேலும் உறுப்பினர்களின் தொகுதியைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படும். இந்த ஒதுக்கீடு குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் நிறுத்தப்பட்டு பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது.
முன்னதாக, ஒரு எம்.பி., ஒரு கல்வியாண்டில் இரண்டு மாணவர்களைச் சேர்க்கைக்குப் பரிந்துரை செய்யலாம் என்று விதிமுறை இருந்தது. இது 2011-ல் ஐந்து, 2012-ல் ஆறு, 2016-ல் 10 என அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் எம்.பி.க்கள் ஒவ்வொரும் தற்போது 10 இடங்களுக்கு மாணவர்களைப் பரிந்துரை செய்யலாம் என்ற நிலை இருந்தது.
தற்போது மக்களவையில் 543 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களும் என 788 பேர் உள்ளதால், 7,880 பேருக்கான சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த சூழலில் எம்.பி.க்கள் பரிந்துரைப் பட்டியலால் குழப்பம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. பல ஆண்டுகளாக எம்.பி.க்கள் ஏராளமான கோரிக்கைகளைப் பெறுவதால், சேர்க்கைகள் பெரும்பாலும் ஒதுக்கீட்டின் அளவைத் தாண்டிவிட்டன, அவற்றில் பலவற்றை நிராகரிப்பது கடினம் என்று அவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, 2018-19 ஆம் ஆண்டில், அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 7,880-க்கு எதிராக 8,164 மாணவர்களும், மத்தியக் கல்வி அமைச்சரின் 450 இடங்களுக்கு எதிராக 9,402 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். அதிகப்படியான மாணவர் சேர்க்கை இந்த பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை சிதைக்கிறது என்று வாதம் எழுந்தது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதித்த நிலையில், ஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது சிறப்பு ஒதுக்கீடு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.