சின்னத்திரையில்  தனது தனித்துவ காமெடியாலும் , இன்ஸ்டண்ட் கவுண்டராலும் ரசிக்க வைப்பவர் பாலா. கலக்கப்போவது யாரு  என்னும் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட பாலாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். பாலா ஆரம்ப காலத்தில் திரைத்துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்ததுமே சென்னையை நோக்கி தனது கலைப்பயணத்தை துவங்க ஆரமித்தவர். சமீபத்தில் பாலாவிற்கு விஜய் தொலைக்காட்சியின் விஜய் அவார்ட்ஸ் வழங்கப்பட்டது. அப்போது யாரும் அறியாத பாலாவின் மற்றொமொரு முகத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரையிட்டு காட்டியிருந்தனர். அதிகமாக சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகர்கள் கூட , மற்றவர்கள் உதவ வேண்டும் என்றால் சற்று யோசித்துதான் முடிவெடுப்பார்கள். ஆனால் வளர்ந்து வரும் கலைஞனான பாலா, தான் வாங்கும் குறைந்த பட்ச சம்பளம் , குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைக்கும் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்களை ஆதரவற்றவர்கள் இல்லத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் வழங்கி வருகிறார்.


 






ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது மட்டும்மால், ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும்  தன்னால் ஆன உதவிகளை செய்து மற்றவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதோடு அங்கிருக்கும் பெரியவர்கள் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முதல் ஆளாக வந்து தங்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வார் என்கின்றனர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள். இத்தனை உதவிகளையும் செய்வதற்கு தனக்கு தூண்டுதலாக இருந்தது, உறவுகள் சில சம்பவங்களும்தான் என விழா மேடையிலேயே பகிர்ந்துக்கொண்டார் பாலா . “ நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதும் எனது அம்மாக்கூட சம்மதித்துவிட்டார்கள் . ஆனால் சொந்தக்கார பாட்டி ஒருவர் என்னை ” இது போய் என்ன கிழிக்க போகுது “ஏளனமாக பேசினார்.அதுமட்டுமல்லாமல் எனது அம்மாவை அழைத்து , உனது பையன் திருமண பத்திரிக்கையில் , பெயருக்கு பின்னால் என்ன டிகிரி போடுவான் எஸ்.எஸ்.எல்.சினுதானே போட முடியும் என்றார்கள். நான் யோசித்து பார்த்தேன் எனக்கும் அந்த லாஜிக் இடிச்சது. அப்போ நான் முதல்ல யோசித்தேன். நாம பெயருக்கு பின்னால் டிகிரி போடுவது பெரிதல்ல. என்னால் இரண்டு பேர் பேருக்கு பின்னால் டிகிரி போடனும்னு யோசித்தேன். அந்த சமயத்தில்தான்  சூப்பர் சிங்கரில் கேமியோவாக போகும் பொழுது 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் 10 ஆயிரமாக மாறியது, குக் வித் கோமாளியில் சம்பளம் 20 ஆயிரமாக கிடைத்தது. எனக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் கிடையாது அதனால அதை சேர்த்து வைத்து  டிரஸ்ட்டிற்கு அனுப்பினேன். ஒரு நாள் நேரடியாக போய் பார்த்தேன் அப்போது இரண்டு பசங்களுக்கு எந்தவித பின்னணியும் இல்லை என்பது தெரிய வந்தது. அவங்களுக்கான படிப்பு செலவை ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு வேலை முடித்து செல்லும் வழியில் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அடுத்த நாள் நலம் விசாரிக்க அழைத்த பொழுது , அவரை அரை மணி நேரத்திற்கு முன்னதாக கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் உயிரிழந்துவிட்டார். கடந்த இரண்டு நாட்களா பிபி, கால்சியம் மாத்திரை போடாததும் ஒரு காரணம்னு சொன்னாங்க . அப்படித்தான் இவங்களுக்கும்  உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 100 பேருக்கு கல்வி கொடுக்காம என் உயிரை கொடுக்கமாட்டேன்“ என தனக்கே உரித்தான பாணியில் பதிலளித்திருக்கிறார் பாலா.