அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப்பைகளில், முன்னாள் அதிமுக முதல்வர்கள் படமே இருக்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் சொன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெயர்களை மாற்றும் 13 கோடியை மாணவர்கள் நலனுக்கு செலவிடலாம் எனக் கூறியதாகவும் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதனால் அதிமுக செயல்பாடுகளுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியில் இந்த அரசு செயல்படவில்லை என்றும் கூறினார்.
முன்னதாக, 2021-2022-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. குழந்தை எழுத்தாளருக்கு " கவிமணி விருது", பள்ளிப் பதிவேடுகள் கணினிமயமாக்கல், உயர்கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனை மையத்தை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்:
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேதியியல், வேளாண்மை போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள தலைசிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து சம்மந்தப்பட்ட பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கூட்டு வெளியீடாக 2 கோடி செலவில் வெளியிடப்படும். இது முத்தமிழறிஞர் மொழிப்பெயர்ப்புத் திட்டம் எனும் மாபெரும் திட்டத்தின் தொடக்கமாக அமையும்.
இளந்தளிர் இலக்கியத் திட்டம்: குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் (பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஓவியம் தீட்டும் ஆற்றல்) நன்னெறிக் கல்வியைக் கற்பிக்கவும் மற்றும் அறம்சார் சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் இளந்தளிர் இலக்கியத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 100 குழந்தை இலக்கிய நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படும்.
குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது: குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதிற்குட்பட்ட ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்கப்படும்.
பொது மாறுதல் கொள்கை: அரசுப் பொது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக, ஆண்டுதோறும் பொதுமாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொதுமாறுதலை ஒளிவுமறைவின்றி 2021-22ஆம் கல்வியாண்டு முதல் நடத்திட பொதுமாறுதல் கலந்தாய்வுக் கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும்.
பள்ளிகளில் பாரம்பரியக் கலைகள்: கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பன்னிசை, நாட்டுப்புறப் பாட்டு போன்ற தமிழரின் பாரம்பரியக் கலைவடிவங்களை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் எடுத்து செல்வதை இலக்காகக் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் உதவியுடன் பயிற்சியளிக்கப்படும்.
இதுபோலவே சிலம்பம், மல்யுத்தம் முதலான தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலைகளையும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முறையாகக் கொண்டு சேர்க்க உரிய பயிற்சி அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனை மையம்: அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முறையாகக் கொண்டு சேர்ப்பதற்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும்.
முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தொடர் நெறிப்படுத்தும் (Continuous Mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்: மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணும் வகையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படும். பள்ளி ஒன்றுக்கு ரூ.5000 வீதம் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும், ரூ.10,000 வீதம் 6,948 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும், ரூ.25,000 வீதம் 6,177 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் 35 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் அறிவித்தார்.
மேலும், வாசிக்க: