இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மசோதாவை தாக்கல் செய்தார்.


தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலையை ஆராய குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான இந்த குழு அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல், வேளாண்மை, கால்நடை, சட்டம், மீன்வளம் ஆகிய இளநிலை படிப்புகளுக்கான உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைந்து வருவதால் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


 






அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை அதிமுக முழுமனதுடன் ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவ எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்கும் நிலையில் மசோதா இன்றே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


மசோதாவை தாக்கல் செய்த பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் விரும்பும் உயர் கல்வி பெறுவது மிகக் கடினமாக உள்ளது. தொழிற்கல்வி படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளது. கிராமப் புற மாணவர்களின் நிலையை கருத்தில்கொண்டு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.