தோட்டக்குறிச்சி அரசு பள்ளியில் சிதிலமடைந்த பழைய கட்டிடத்தை இடித்ததால் சமுதாயக்கூடத்தில் இரண்டு ஆண்டுகளாக படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் விரைவில் புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் 1962 ஆம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பள்ளி 1999 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் போதிய இடம் இல்லாததால் புதிய வகுப்பறைகள் கட்டப்படாமல் ஏற்கனவே இருந்த பழைய வகுப்பறை கட்டிடத்திலேயே உயர்நிலை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நடைபெற்று வந்த வகுப்பு கட்டிடம் 60 ஆண்டுகள் மேல் ஆனதால் கூரையில் இருந்த மர சட்டங்கள் கரையான் அரித்தும் ஓடுகள் உடைந்தும் சுவற்றில் விரிசல் விழுந்தும் ஆபத்தான நிலையில் இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு பழைய வகுப்பறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. உயர்நிலை 6 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் இரண்டு ஆண்டுகளாக அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டக்குறிச்சி சமுதாய கூட்டத்தில் நடைபெற்று வருகிறது.
சமுதாயக் கூடத்தில் பள்ளி வகுப்புகள் நடைபெறுவதால் விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் உள்ளூர் மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை இங்கு நடத்தி வருகின்றனர். மற்ற நாட்களில் வீட்டு விசேஷங்களை நடத்துவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அது மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை வகுப்பு முடிந்தவுடன் பள்ளிக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் சமையல் கூடத்தில் வைத்து பூட்டி விடுகின்றனர். பின்னர் திங்கள் கிழமை காலை முன்தினம் நடைபெற்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விசேஷத்தின் போது சிதறி கிடந்த உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்திய பிறகு தான் பாடம் நடத்த முடிகிறது
மேலும் செய்முறை வகுப்புகளுக்கு பழைய பள்ளி கட்டிடம் செல்ல 500 மீட்டர் தூரம் செல்ல வேண்டிய உள்ளதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் புதிய வகுப்பறை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி கல்வி துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுகின்றனர். குறிப்பாக தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை விரைந்து முடிக்கவும், மற்றும் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையாக உள்ளது.