பல நாட்களாக பெரும் சரிவில் சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை குறியீடுகள், இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 236.51 புள்ளிகள் உயர்ந்து 59,439.41 புள்ளிகளாகவும், நிஃப்டி 59.50 புள்ளிகள் உயர்ந்து 17,623.5 புள்ளிகளாகவும் இருந்தது.


பங்குச் சந்தை நிலவரம்:


இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 327.9 புள்ளிகள் உயர்ந்து 59,530.80 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 89.65 புள்ளிகள் உயர்ந்து 17,653.60 ஆகவும் உள்ளது.






நிஃப்டியில் ஆக்சிஸ் வங்கி, எம் அண்ட் எம், டைட்டன் நிறுவனம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை லாபத்தில் இருந்தன. அதே நேரத்தில் பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப் மற்றும் திவிஸ் லேப்ஸ் ஆகியவை பின்தங்கியுள்ளன.


ஆனால், கடந்த நாட்களில் பங்குச் சந்தை வீழ்ச்சிகளால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இன்னும் மோசமான நிலையிலே உள்ளது.



தாக்கத்திற்கான காரணம்:



  • ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளின் வர்த்தகம், இதர நாடுகளுடன் பெரிதும் பாதித்தது. இதன் காரணமாக பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வுக்கு வழி வகுத்தது.

  • உலகளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றால், பொதுமுடக்கம் ஏற்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்குள்ளானது.

  • இந்த நிலையில், உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை சில நாட்களுக்கு முன் உயர்த்தியது.


இதனால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் வெளியேறினர். சந்தைகளிலிருந்து வெளியேறியதற்கான காரணம், அமெரிக்க வங்கியில் பணம் வைத்தால் ஆதாயம் அதிகம் என்பதால்தான்.


உயர்ந்த டாலர் மதிப்பு:


அயல்நாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறியதன் காரணமாக, டாலர் கரன்சிகள் இந்தியாவை விட்டுச் சென்றன. இதனால் இந்தியாவுக்கு டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்ததாலும், பற்றாக்குறை காணப்பட்டதாலும் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், சந்தையில் தக்காளி வரத்து குறைந்தால் விலை உயர்கிறது, அதேபோன்றுதான் டாலரின் மதிப்பும் உயர்ந்தது. 


இந்த தாக்கத்தால் இந்திய ரூபாய் மட்டுமன்றி, உலகத்தில் உள்ள பல்வேறு கரன்சிகளும் வரலாறு காணாத சரிவை சந்தித்தன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், பெரும்பாலும் டாலரின் மதிப்பில்தான் வாங்குகிறோம். ஆகையால், டாலரின் மதிப்பு உயரும் போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயர தொடங்கியுள்ளது.


இந்நிலையில் டாலருக்கு எதிரான, இந்தி ரூபாயின் மதிப்பானது 82.91 ஆகவுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 




குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில், இந்தியா உலக அளவில் மூன்றாவது நாடாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சமையல் எண்ணெய் உள்ளிட்ட இதர இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பங்குச் சந்தைகள் சில தினங்களாக சற்று அதிகரித்து வருவது, முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் ஏற்பட்டுள்ளது.