சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டரும் டானும் 100 கோடி வசூலை எட்டிய நிலையில், ஹாட்ரிக் வெற்றியை நோக்கி  தீபாவளி பரிசாக வெளியாகி இருக்கிறது  ‘பிரின்ஸ்’.  சிவாவுக்கு முதன்முறையாக நேரடி தெலுங்கு படமாகவும் வெளியாகியிருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக, உக்ரைன் நடிகை மரியா நடித்து இருக்கிறார். தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். 


 


                                           


 


படத்தின் கரு: 


ஜாதி, மதமே கடவுள் என்று நினைக்கும் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் அன்பு ( சிவகார்த்திகேயன்). அந்தப்பள்ளிக்கு புதிய ஆசிரியராக பணியாற்ற வருகிறா ஜெஸ்ஸிகா (மரியா). இவர்களுக்கிடையே காதல் முளைக்க, ஜாதி, மதத்தை தாண்டிய புரிதலில் இருக்கும் சிவகார்த்திகேயனின் அப்பாவான உலகநாதன் (சத்யராஜ்)  முதலில் காதலுக்கு சம்மதிக்கிறார். ஆனால் அதன் பின்னர் அந்தப்பெண் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவர, காதலுக்கு முட்டுக்கட்டைப்போடுகிறார் சத்யராஜ். இவரைத்தாண்டியும், அவர்வாழும் கிராமத்தை தாண்டியும் தனது கனவு தேவதையை சிவகார்த்திகேயன் கரம்பிடித்தாரா இல்லையா? என்பதை கிரிஞ்ச் காமெடிகளால் நிரப்பினால் அதுதான் பிரின்ஸ் படத்தின் கதை 




 


சிவகார்த்திகேயனின் ஆகப்பெரும் பலம் அவரின் காமெடி சென்ஸ்.  கடந்த இரண்டு படங்களில் டார்க் காமெடியையும், காலேஜ் காமெடியையும் வைத்து ஹிட் கொடுத்த அவர், இதில் கொஞ்சம் மாறுதலாக கிரிஞ்ச் ( கடி ஜோக்ஸ்) காமெடியை கையில் எடுத்து ஹிட் கொடுக்க முயன்று இருக்கிறார். ஆனால் அது பிரின்ஸில் பாதிக்கு பாதிதான் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. வழக்கம் போல ஒன் மேன் ஷோவாக படத்தை தாங்கி நிற்கும் சிவா டான்ஸில் பின்னியிருக்கிறார். குறிப்பாக பிம்பிளிக்கி பிளாப்பி பாடலில் வரும் சிங்கிள் ஷாட் டான்ஸ் அல்டிமேட். 


பிரிட்டிஷ் பெண்ணாக வரும் மரியாவிடம் இயல்பாக இருக்கும் வெளிநாட்டு பெண் தோற்றமும், அவர் தமிழை உச்சரிக்கும் விதமும் அந்தக்கதாபாத்திரத்திற்கு உண்மைத்தன்மையை சேர்த்து இருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு இணைந்திருக்கும் சிவா சத்யராஜின் காம்போ இதில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இதரகதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கவில்லை. 





படத்தில் இந்தியா - பிரிட்டிஷ் நாடுகளுக்கிடையேயான உரையாடல்கள், போர் கொடுக்க கூடிய வலி உள்ளிட்டவை பேசப்பட்டிருந்தாலும், அவையனைத்தும் கிரிஞ்ச் காமெடிகளுக்குள் புதைந்து விட்டதால் பார்வையாளனுக்கு அவை எந்த வித தாக்கத்தையும் கொடுக்கமால் செல்கிறது.


முழுக்க முழுக்க காமெடிகளை மட்டுமே நம்பி களத்தில் குதித்திருக்கும் இயக்குநர் அனுதீப் கிரிஞ்ச் காமெடிகளை ஓவர் டோஸாக கொடுத்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது. தமனின் பாடல்களும், இசையும் ஓகே என்றாலும் நமது மனம் எங்கோ அனிருத்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு பாடல்களில் பிரதிபலித்த அளவு படத்தில் பிரதிபலிக்க வில்லை. ஒட்டுமொத்தத்தில் தீபாவளிக்கு அணுகுண்டு என்று சொல்லி, கடைசியில் லட்சுமி வெடியை வெடித்திருக்கிறார்கள்.