கரூரில் 32 சங்க கால புலவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் இயற்றிய 51 இலக்கியங்களின் பெயர்களை ஒரு நிமிடம் 21 விநாடிகளில் படம் பார்த்து சொல்லி ப்ரீகே.ஜி படிக்கும் குழந்தை உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் - பூரணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சிவதர்ஷன் என்கின்ற மூன்றரை வயது மகன் உள்ளார். இந்த காக்காவாடியில் செயல்படும் தனியார் (பி.ஏ.வித்யாபவன்) பள்ளியில் ப்ரீகே.ஜி படித்து வருகிறது. பள்ளியில் சேர்ந்த அந்த குழந்தை வகுப்பு எடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஜன்னல் வழியாக பள்ளியின் மைதானத்தை பார்த்துக் கொண்டு அழுதபடி இருந்துள்ளது. குழந்தையின் செயலை பார்த்த பள்ளி மழலையர் ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, குழந்தையை வகுப்பறையில் இருந்து வெளியில் அழைத்துச் சென்று மைதானத்தில் இருக்கும் மரங்களை காட்டி விவரிப்பது, விளையாட்டு போன்ற செயல்களில் ஈடுபடுத்தினார். அப்போது, முதல் நாள் நடந்த நடவடிக்கைகளை மறக்காமல் அடுத்த நாளும் அப்படியே செல்வராணியிடம் கூறி வந்துள்ளார்.
அவர் மறந்து போன விஷயத்தை கூட செல்வராணிக்கு எடுத்துச் சொல்லியதால் ஆச்சர்யப்பட்டுள்ளார். குழந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக பயிற்சி கொடுத்து சாதனை செய்ய வைக்க பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரிடம் பேசி இருக்கிறார். இதனை ஏற்ற அவர்கள் சென்னையை சேர்ந்த டிரம்ப் உலக சாதனை புத்தக நிர்வாகத்தை அணுகியுள்ளனர். அதனை தொடர்ந்து 32 சங்க காலப் புலவர்களின் பெயர்களை புகைப்படத்துடன் காட்டியும், அவர்கள் எழுதிய 51 இலக்கிய நூல்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்து பயிற்சி அளித்துள்ளனர்.
பள்ளி மழலையர் ஒருங்கிணைப்பாளர் செல்வராணி மற்றும் குழந்தையின் தாய் பூரணி இணைந்து தயார் படுத்தியுள்ளனர். ஒன்றரை மாத காலத்தில் குழந்தை படத்தை பார்த்து 32 சங்க கால புலவர்களின் பெயர்கள் மற்றும் 51 புத்தகங்களின் பெயர்களை ஒரு நிமிடம் 21 விநாடிகளில் சொல்லி டிரம்ப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சாதனை குழந்தை, தான் பெற்ற கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.