கர்நாடக மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 15 பேர் அடங்கிய இந்தக் குழுவுக்குத் தலைவராக, பேராசிரியர் சுக்தேவ் தோரட் இருப்பார். 


மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது. அந்தக் கல்வி கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. கடந்த பாஜக ஆட்சியில், நாட்டிலேயே முதல்முறையாக 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை அமல் செய்யப்பட்டது. எனினும் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. சித்தராமையா கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். 


இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) பதிலாக மாநிலப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில கல்விக் கொள்கையை (SEP) கர்நாடகாவில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். 


குழுவில் இருப்பவர்கள் யார்?


யுஜிசி முன்னாள் தலைவர், எழுத்தாளர், பேராசிரியர், பொருளாதார நிபுணர், பிரபல கல்வியாளர் என பல புகழுக்குச் சொந்தக்காரர் சுக்தேவ் தோரட். இவரின் குழுவின் தலைவர் ஆவார். இந்தக் குழுவில் 15 நிபுணர்கள் இருப்பார்கள். இவர்களுடன் துறைசார் நிபுணர்த்துவம் பெற்ற நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் 8 பேர் செயல்படுவர். 


யுஜிசி-ன் கீழ் செயல்படும் CSSEEIP அமைப்பின் நிறுவனராக செயல்பட்ட பேராசிரியர் ஜாஃபெட் இதில் உறுப்பினராக இருப்பார். அத்துடன் இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி துணை வேந்தர் டாக்டர் சுதிர் கிருஷ்ணசாமி, ஹைதராபாத் பல்கலைக்கழகம்,ஸ்கூல் ஆஃப் பிஸிக்ஸ் பேராசிரியர் சரத் ஆனந்தமூர்த்தி, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் ஆளுகைப் பள்ளியின் பேராசிரியர் நாராயணா மற்றும் பலர் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 




உயர் கல்வித்துறையின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாக்யவனா எஸ் முடிகௌத்ரா, ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார், மேலும் கூட்டத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 


விஞ்ஞான மனோபாவம், அறிவுசார் வளர்ச்சி


மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா எக்ஸ் தளத்தில் கூறும்போது, கர்நாடக மாநில கல்விக் கொள்கையின் வரைவைத் தயாரிப்பதற்காக பேராசிரியர் சுக்தேவ் தோரட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான மனோபாவம், அறிவுசார் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு தேவையான கல்வி ஆகியவற்றை வளர்ப்பதற்கு இந்த குழு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.