காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 அரசு பள்ளிகளில் அய்யம்பேட்டை களியாம்பூண்டி மற்றும் மவுலிவாக்கத்தைச் சேர்ந்த 3 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.48 சதவீதம் பெற்றுள்ளது. களியாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியாம்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. களியம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள்  இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.




இப்பள்ளிக்கு களியாம்பூண்டி, அழிசூர், மேல்பாக்கம், ராவுத்த நல்லூர், உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருவதற்கு போதிய பேருந்து வசதியும் இல்லாத நிலை நீடித்து வருகிறது. ஒரு அரசுப் பேருந்து மற்றும் ஒரு தனியார் பேருந்து ஆகியவை மட்டுமே இவ்வழித்தடத்தில் செல்கிறது. அரசு பேருந்து காலை வேலைகளில் பள்ளி நேரத்தில் அவ்வழியில் செல்வதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பள்ளிக்கு பாடம் எடுக்கும் வரும் ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இருந்தும் இப்பள்ளியில் 12ஆம் வகுப்பில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய 26 மாணவர்கள் மற்றும் 23 மாணவியர் என மொத்தம் 49 பேர் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி என்று இந்த பள்ளி பெற்றுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பணியிட மாறுதல்  பெற்றதால், இந்த இடங்கள் தற்போது காலியாக இருந்த போதிலும், மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.




இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் வேதகிரி கூறுகையில், தொடர்ச்சியாக பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என ஆசிரியர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். பொருளாதாரம் மற்றும் கல்வியிலும் பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று தங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என ஆசிரியர்களாகிய நாங்கள் முயற்சி மேற்கொண்டு வந்தோம். மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் வகுப்புகள் வைத்து பயிற்சியளித்து, 100% இலக்கை அடைந்துள்ளோம். கடந்த 2019ஆம் ஆண்டு இப்பள்ளி 12ம் வகுப்பில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பொழுது 100% என்ற இலக்கை அடைந்துள்ளோம். எந்த அளவிற்கு ஆசிரியர்கள் பங்களிப்பு கொடுத்தார்களோ, அதே அளவிற்கு மாணவர்கள் தங்களுடைய பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மனோகரன் மற்றும் துணை தலைமை ஆசிரியர் நரேஷ் குமார் ஆகியோர் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார். இதனால் கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்பியதில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண