சர்வதேச யோகா தினத்தை ஒட்டி கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்று வரும் விழாவில் கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடி, யோகா தனிநபர், நாடுகள் மற்றும் உலகம் முழுமைக்கும் அமைதியைக் கொடுப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். 


8ஆவது சர்வதேச யோகா தினம்


இன்று (ஜூன். 21) இந்தியா முழுவதும் 8ஆவது சர்வதேச யோகா தினம் நடைபெற்று வருகிறது. ’மனித நேயம்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் 75 இடங்களில் சர்வதேச யோகா கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.


 






அந்த வகையில் மைசூருவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ”யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. தனி நபர்களுக்கு மட்டுமின்றி, பல நாடுகளுக்கும், உலகம் முழுமைக்கும் யோகா அமைதியைக் கொடுக்கிறது. உலக அளாவிய நிகழ்வாக யோகா மாறி உள்ளது.


கொரோனாவில் உதவிய யோகா


 






கொரோனா காலத்தில் யோகா ஆரோக்கியத்து வழிகாட்டியது. இந்த நாளில், ஐ.நா., மற்றும் அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களுக்கு மன அமைதியை அளித்து உலக அமைதிக்கு வித்திடுகிறது. இவ்வாறு தான் உலக மக்கள், நாடுகளை யோகா ஒன்றிணைக்கிறது. நம் அனைவரது பிரச்சினைகளையும் சரிசெய்யும் விஷயமாக யோகா உருவெடுக்கவல்லது”  எனத் தெரிவித்துள்ளார்.


மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்பட மொத்தம் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.


புதுச்சேரி


மேலும், புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரெங்கசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


முன்னதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் 16 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து யோகாசனம் செய்தனர்


இந்தியா தவிர, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நகரங்களிலும் மிக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.