புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், ‛எனது மகள் கௌரி ’கல்விராயன் விடுதி’ பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார். அவர்  கிராமப்புற வளர்ச்சி குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். 'தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வுத் திட்டத்தையும் தயாரித்துள்ளார்.

 

மேலும் ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிய பாரம்பரியத்தையும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக எங்கள் பகுதியில் உள்ள தெருக்கள் குறித்தும் அதன் பாரம்பரியம் குறித்தும்.  எங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் தங்கள் குடிநீர் தேவைக்காகவும், தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய்  போன்றவற் நீர்நிலைகளை மேம்பாடுக்காவும், பகுதி மக்கள் குழுவை உருவாக்கியது குறித்தும் அவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அதன் பேரில் அவர் கிராம புள்ளிவிபரங்களை முழுமையாக உருவாக்கியுள்ளார். 



 

இந்த கிராம பதிவை கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டுகள் வாரியாக அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் .மேலும்  மாவட்டத்தின் கலெக்டர் போல கிராம ஆட்சியர் என்ற ஒரு பதவியை கிராமந்தோறும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் . மேலும் எனது மகள் கெளரி உருவாக்கிய தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கை நூலை 5ஆம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் பட்சத்தில்  ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும். எனவே எனது மகள் உருவாக்கிய இந்த மூன்று திட்டங்களையும் அமல்படுத்த தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்” என அவரது மனுவில் தெரிவித்திருந்தார்.

 



 

 இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,   மாணவி காணொலியில் ஆஜரானார். மாணவி கெளரி ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி  திட்டம் தயாரித்த  மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு  தெரிவித்தனர். மேலும் அது தொடர்பான பல்வேறு தகவல்களை மனுவில் சேர்க்க உத்தரவிட்டு, ”சிறு வயதில் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கெளரியின் முயற்சியை பாராட்டுகிறோம். அவர் வலியுறுத்தும் திட்டத்தின் முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தி மனு செய்யக்கோரி” வழக்கு விசாரணை ஜூன் 16 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர் .