சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் தொடர்பான கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான பொறுப்பற்ற வெறுப்பை இத்தகைய கேள்விகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் திரும்ப பெற வேண்டும் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, சிபிஎஸ்இ வாரியத் தலைவர் மனோஜ் அஹுஜாவுக்கு ஜோதிமணி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி, 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நடைபெற்ற ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த கேள்விகளை வாசித்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். 'இல்வாழ்கையில் மனைவிமார்கள் வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது', 'குழந்தைகளும், வேலைக்காரர்களும் இந்த வகையில்தான் கீழ்ப்படிய நிர்பந்திக்கப்பட்டனர்' போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கணவனுக்குத் கீழ்ப்பணிந்து நடந்தால்தான், இல்வாழ்கையில் அதிகார கட்டமைப்பு ஒன்று இருக்கும் என்ற கருத்தையும் முன்வைக்கிறது. இத்தகைய வாதங்கள் பாலின பாகுபாட்டினை ஊக்குவிப்பதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னிறுத்திய பாலின வாதங்களுக்கு எதிரானதாகும்.
சமூகத்தின் அனைத்து மட்டங்களில் ஓரங்கட்டப்பட்டுள்ள பெண்கள், எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகுதான் உயரங்களை அடைகின்றனர். ஆனால், வினாத்தாளில் இதுபோன்ற வாதங்கள் பெண்கள் மீதான வெறுப்பை இயல்பானதாக்கிவிடும். மேலும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் அதிகார கட்டமைப்பை முன்வைப்பது குழந்தை உரிமைகளுக்கு எதிரானது.
சிபிஎஸ்இ கல்வி வாரியம் எவ்வளவு பின்னோக்கியுள்ளது என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது. எனவே, இத்தகைய வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, 21-ஆம் நூற்றண்டில் இதுபோன்ற ஆணாதிக்க சிந்தனைகளுக்கு ஏன் இடமில்லை என்ற விழிப்புணர்வை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்த பாலின சமத்துவ வகுப்புகள் நடத்தவேண்டும்”
இவ்வாறு, கரூர் எம்.பி ஜோதிமணி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்