இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பிஎச்.டி நேர்முகத் தேர்வில் ஒருதலைபட்சமாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பி.எச்.டி போன்ற ஆய்வு படிப்புகளில் சாதி மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஜே.என்.யு பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Students Association - BAPSA) குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்த அமைப்பு ஜேஎன்யு துணைவேந்தர்,ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் (ஜேஎன்யுடிஏ) கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில்,பிஎச்.டி மாணவர் சேர்க்கை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் (viva voce) அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், நேர்முகத் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.மொத்த மதிப்பெண்ணில் சிலர் ஒரே ஒரு மதிப்பெண் மட்டும் பெற்றுள்ளனர். பட்டியலின/பழங்குடியின/ இதர பிற்படுத்தப்பட்ட/ சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் இத்தகைய போக்கு காணப்படுவது ஆழந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
மாணவர்களின் அடிப்படைக் கண்ணியத்தை குறைக்கும் இத்தகைய போக்கை என்றுமே நியாயப்படுத்த இயலாது. மாணவர் சேர்கையில், அப்துல் நபி (Abdul Nafey committee), ராஜீவ் பாட் (Rajiv Bhatt committee) எஸ்.கே தோரட் போன்ற குழுக்களின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வு மதிப்பெண் முறையில் அதிக வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட வேண்டும், நேர்முகத் தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண்ணை 30-லிருந்து 15- ஆக குறைக்க வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இழைக்கப்படும் அநீதிகளை கலைந்தெடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகளை மேற்கூறிய குழுக்கள் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்