நாடு முழுவதும் உள்ள முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின் முதல் கட்டத் தேர்வுகள் நாளை (ஜனவரி 21) தொடங்குகின்றன. இத்தேர்வை நடத்தும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வு முகமை, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தேர்வு அட்டவணை

ஜனவரி 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கணினி வழித் தேர்வாக (CBT) இத்தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார், பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அசல் புகைப்பட அடையாளச் சான்றுகள் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்.

Continues below advertisement

ஆதார் அங்கீகாரம் குறித்த எச்சரிக்கை

ஆதார் எண் மூலம் பதிவு செய்யாத மாணவர்கள் அல்லது ஆதார் அங்கீகாரத்தைத் தேர்வு செய்யாதவர்கள், தேர்வு மையத்திற்கு வழக்கத்தை விட முன்னதாகவே செல்ல வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே மையத்திற்கு வந்து தங்களது கைரேகை (Biometrics) உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வது அவசியமாகும்.

தேர்வு மைய விதிமுறைகள்

  • தேர்வு மையத்தின் இருப்பிடத்தைச் சரியாகத் தெரிந்துகொள்ள மாணவர்கள் முன்கூட்டியே அங்கு சென்று வருவது நல்லது. கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கத் தேவையான நேரத்திற்கு முன்னதாகவே மையத்திற்கு வர வேண்டும்.
  • பி.ஆர்க் போன்ற படிப்புகளுக்கான தேர்வெழுதும் மாணவர்கள் ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் மற்றும் வண்ணப் பென்சில்களைத் தாங்களே கொண்டு வர வேண்டும். ஆனால், வாட்டர் கலர் பயன்படுத்த அனுமதியில்லை.
  • தேர்வு மையத்திற்குள் நுழையும்போது தீவிர சோதனை செய்யப்படும். ஒருவேளை மாணவர்கள் தேர்வு நேரத்தில் கழிப்பறைக்குச் சென்று மீண்டும் உள்ளே வரும்போதும், இந்தச் சோதனையும் கைரேகைப் பதிவும் மீண்டும் கட்டாயமாக மேற்கொள்ளப்படும்.

ஹால் டிக்கெட்டைச் சமர்ப்பித்தல்

தேர்வு முடிந்து அறையை விட்டு வெளியேறுவதற்கு முன், முறையாக நிரப்பப்பட்ட ஹால் டிக்கெட்டை அங்கிருக்கும் பெட்டியில் (Dropbox) தவறாமல் போட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என என்டிஏ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தக் கடுமையான விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க முடியும் எனத் தேர்வு முகமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.