தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாத காலத்திற்குள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களம் என்பது எப்போதுமே இந்தியா முழுவதையும் திரும்பி பார்க்க வைக்கும் அரசியல் களம் ஆகும். தமிழகத்தில் இதுவரை நடந்த 16 சட்டமன்ற தேர்தல்களும் அப்படியே நடந்துள்ளது.
மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தல்:
அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைத்த, தேர்தல் ஆணையத்தையே நடுநடுங்க வைத்த ஒரு தேர்தலை கீழே காணலாம்.
1996ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் மொத்த இந்தியா முழுவதும் பேசுபொருளானது மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்த முன்வைத்து வந்த நிலையில், அப்போதைய அரசு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
1033 வேட்பாளர்கள்:
இதன் காரணமாக, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாகவும், நாடு முழுவதும் கவனம் ஈர்க்கும் விதமாகவும் அந்த தேர்தலில் விவசாயிகளே களம் இறங்க முடிவு செய்தனர். அப்படி, 1996ம் ஆண்டு மே 2ம் தேதி நடந்த அந்த தேர்தலில் விவசாயிகளும் தேர்தல் களத்தில் இறங்க, மொத்தம் 1033 வேட்பாளர்கள் மொடக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டனர். இது மொத்த நாட்டையுமே திரும்பி பார்க்க வைத்தது. இதில் 1005 வேட்பாளர்கள் ஆண்கள், 28 வேட்பாளர்கள் பெண்கள்.
இதனால், தேர்தல் ஆணையம் திக்குமுக்காடிப்போனது. இதையடுத்து, இந்த மொடக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் சட்டமன்ற தேர்தலை நடத்த சிறப்புக் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்தது. அந்த குழு தேர்தல் தேதியை மே 2ம் தேதியில் இருந்து ஜுன் 1ம் தேதிக்கு மாற்றினர்.
வெற்றி பெற்றது யார்?
வழக்கமாக, ஒரு தொகுதியில் குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 30 வேட்பாளர்கள் வரை போட்டியிடுவார்கள். 1996ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறைப்படுத்தப்படாத காலம் என்பதால், மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர்கள் யார்? யார்? அவர்களின் சின்னங்கள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வதற்காக தனியாக வாக்குப்பதிவு புத்தகமே அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். அந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 64 ஆயிரத்து 436 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் 88 வேட்பாளர்கள் ஒரு ஓட்டுகூட பெறவில்லை. 158 வேட்பாளர்கள் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர்.
புரட்சிக்கு வித்திட்ட தேர்தல்:
இந்த தேர்தல் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்திய தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கு பின்பு பல்வேறு கிடுக்குப்பிடிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. அதாவது, சட்டமன்ற தேர்தலில் வேட்பாளருக்கான டெபாசிட் தொகையாக ரூபாய் 250ல் இருந்து ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தியது. ஆதிதிராவிட பழங்குடியின வேட்பாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தினர்.
மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகையாக ரூபாய் 500ல் இருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆதிதிராவிட, பழங்குடியின வேட்பாளர்களுக்கு ரூபாய் 12,500 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க இந்த தேர்தல், நாட்டின் தேர்தல் விதிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வித்திட்டது.