ஜேஇஇ இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கெனவே பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுவிட்டதாக என்டிஏ அறிவித்த நிலையில், இதுவரை விண்ணப்பப் பதிவுக்கான பக்கம் தொடங்கப்படவில்லை. இது குறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. 


2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதி வரை jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். ஜனவரி 14 வரை விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொண்டனர்.


பிப்ரவரி 7ஆம் தேதி தேர்வு முடிவுகள்


இந்தத் தேர்வின் முதலாம் தாளை எழுத 8,60,064 பேர் விண்ணப்பித்தனர். இரண்டாம் தாளை எழுத 46,465 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 3.84 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்தனர். கடந்த முறை 7.69 லட்சம் பேர் ஜேஇஇ மெயின் தேர்வை எழுதினர். 2023ஆம் ஆண்டில் 8.23 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அதாவது 95.8% பேர் அதிகபட்சமாக இந்த முறை தேர்வு எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகின. அன்றே இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி விட்டதாக என்டிஏ தெரிவித்தது. 




இரண்டாவது அமர்வு எப்போது?


இரண்டாவது அமர்வுக்கான ஜேஇஇ தேர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளன. இந்த அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் கடைசி வாரத்தில் 


இந்த இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தர வரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.


எதுவும் தெரிவிக்காத தேசியத் தேர்வுகள் முகமை


இதற்கிடையே ஜேஇஇ இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று என்டிஏ தெரிவித்தது. மாணவர்கள் இதற்கு மார்ச் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் விண்ணப்பப் பதிவுக்கான பக்கம் அறிவிக்கப்படாதது குறித்து தேசியத் தேர்வுகள் முகமை இது வரை எதுவும் தெரிவிக்கவில்லை. 


விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து என்டிஏ தெளிவுபடுத்த வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஹேஷ்டேகுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.