மாநிலம் முழுவதும் 25.11.2023 அன்று நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாவட்டத்‌ தலைநகர மறியலானது ஒத்திவைக்கப்பட்டு, 09.12.2023 அன்று நடைபெறும்‌ என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.


தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும், போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள், தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்து வருகின்றன.


அந்த வகையில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் அமைப்புகளில் முக்கிய அமைப்பான ஜாக்டோ ஜியோ, நவ. 25ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூறி உள்ளதாவது:


தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- பணியாளர்கள்‌ கோரிக்கைகள்‌ மற்றும்‌ தோ்தல்‌ கால வாக்குறுதிகள்‌ நிறைவேற்றுவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும்‌ கோரிக்கைகளை நிறைவேற்றும்‌ முகமாக, போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று கடந்த 18.10.2023 அன்று திருச்சியில்‌ நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌- உயர்மட்டக்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ முடிவெடுக்கப்பட்டது.


இதன்‌ தொடர்ச்சியாக, வரும்‌ 25.11.2023 அன்று மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மறியல்‌ நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை ஒட்டி, 13.11.2023 திங்கட்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவித்ததோடு, அதற்கு மாற்றாக ஈடுசெய்யும்‌ அரசு அலுவல்‌ நாளாக 18.11.2023 அன்று வேலைநாளாக அறிவித்தது.


இதனால்‌, வரும்‌ நாடாளுமன்றத்‌ தேர்தல்‌ வாக்காளர்‌ சேர்ப்பு மற்றும்‌ திருத்தம்‌ செய்வதற்கான முகாம்களை இந்திய தோதல்‌ ஆணையம்‌ 18.11.2023 மற்றும்‌ 19.11.2023 ஆகிய தேதிகளில்‌ நடத்த திட்டமிட்டது, ஒரு வாரம்‌ ஒத்தி வைக்கப்பட்டு 25.11.2023 மற்றும்‌ 26.11.2023 ஆகிய தேதிகளில்‌ நடைபெற உள்ளது.


இந்த முகாம்களில்‌ பெரும்பான்மையாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும்‌ அரசு ஊழியர் -பணியாளர்களும்‌ பணியாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிக்கப்பட்டவர்கள்‌ இப்பணியில் இருந்து எந்த வகையிலும்‌ விலக்கு பெற இயலாது.


ஜாக்டோ ஜியோ மறியலில்‌ அனைத்துத்‌ தரப்பு ஆசிரியர்களும்‌ அரசு ஊழியர்- பணியாளர்களும்‌ முழுமையாக பங்கு பெற வேண்டும்‌. இதன் அடிப்படையில்‌, இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுக்‌ கூட்டத்தில்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ 25.11.2023 அன்று நடைபெற இருந்த மறியல்‌ போராட்டத்தினைவரும்‌ 09.12.2023 அன்று நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதன்‌ அடிப்படையில்‌, மாவட்ட மறியல் போராட்டத்தினை 09.12.2023 அன்று மிகவும்‌ எழுச்சியாக அனைத்துத்‌ தரப்பு ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌-பணியாளர்கள்‌ பங்கேற்போடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை முனைப்புடன்‌ மேற்கொள்ளுமாறு அனைத்து உயர்மட்டக்‌ குழு அமைப்பு நிர்வாகிகளையும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும்‌ கேட்டுக்‌கொள்கிறோம்‌ என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ குழு தெரிவித்துள்ளது.


முன்னதாக ஏப்ரல் மாதம் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.