பள்ளி வளாகங்கள் பாதுகாப்பில்லாமல் மாறுவதாகவும் அவற்றைப் பாதுகாப்பு உடனடியாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளது. 


அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், அரசு உதவிபெறாத மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கடந்த சில காலமாய் பள்ளிகளுக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கும் அரசு பள்ளியை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.


பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற இடம் என்ற மனநிலை 


குறிப்பாக பள்ளியைச் சாராத, பள்ளியின் பெற்றோர் அல்லாத, சில சமூக விரோதிகளால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் துயரம் ஏற்பட்டு வருவதை தங்கள் கவனத்திற்கு எடுத்து வருகிறோம். இதனால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் துணைபுரியும் பணியாளர்களுக்கும் பள்ளிகளை வழிநடத்தும் அதிகாரிகளுக்கும் நிர்வாகத்தினருக்கும் பள்ளி வளாகம் என்பது ஒரு பாதுகாப்பற்ற இடம் என்ற மனப்பான்மையை ஏற்படுத்தி வருகிறது.


கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்களுக்கும், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், இதேபோல் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. அப்பொழுது மறைந்த தமிழக முதல்வர்கருணாநிதியால் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறை மற்றும் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 2008ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அவர் மக்களின் உயிர்காக்கும் மருத்துவனைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மன நிறைவுடனும் தைரியத்துடனும் பணிபுரியும் ஒரு சூழ்நிலையை இயற்றித் தந்தார்.


அதைப்போல், இன்று பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவி பெறும், அரசு உதவிபெறாத, அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள், கல்வி பயிலும் மாணவச் செல்லங்கள் மற்றும் பள்ளிகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு கலக்கமான சூழ்நிலையிலேயே பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு எடுத்து வருகிறோம். 


பள்ளிகளைப் பாதுகாக்க தடுப்புச் சட்டம்


ஆகவே, தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணுவோர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது வன்முறை உபயோகப்படுத்துதல், சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் இழப்பு ஏற்படுத்துதல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள், மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்தினர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகியவற்றைத் தடுக்கவும், அது தொடர்பான உடன் நிகழ்வாக எழுகின்ற விரும்பதகாத நிகழ்வுகளிலிருந்து பள்ளிகளை முழுவதும் பாதுகாக்க ஒரு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டுகிறோம். அச்சட்டத்தில், வண்முறைத் தொடுப்போரின் குற்றங்கள் புலன் கொள்ள மற்றும் பிணையில் விடத் தகாத குற்றங்களாக ஆக்குவதற்கும், அப்படிப்பட்ட செயல்களுக்கு இழப்பீடு, சேதம், நஷ்டம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தீர்மானிக்கும் ஓர் உறுதியான சட்டமாக இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.


குழந்தைகள் பள்ளிக் கல்வி நலம் பேணும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் என்பதன் பொருள், மத்திய மற்றும் மாநில அரசால் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணும் அரசு மற்றும் அரசு நிதிபெறும், அரசு நிதிபெறாத தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆகும்.


பள்ளிகளின் சொத்து


பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணுவோர் என்பது பள்ளிக் குழந்தைகள், பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் நிறுவனங்களை நிர்வகிக்கும் நிரவாங்கள், தாணளர்கள், சக நிர்வாகிகள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் ஆகியோரைக் குறிக்கும்.


பள்ளிகளின் சொத்து என்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க உருவாக்கப்பட்ட அசையும் அல்லது அசையா சொத்துகள் உள்ளிட்ட எல்லா விதமான சொத்துகளையும், கற்க உதவும் அனைத்துச் சாதனங்களையும், இயந்திரங்களையும், பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணும் நபர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் வசத்தில் இருக்கும் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்களையும் குறிக்கும்.


வன்முறை என்பது...


வன்முறை என்பது பள்ளிக் குழந்தைகள் கல்வி நலம் பேணும் நிறுவனங்களில் குழத்தைகள் கல்வி நலம் பேணும் பணியினைப் புரிகின்ற நபர்களுக்கு எதிராகச் செய்யப்படும் நீங்கு, உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அத்தகைய அச்சுறுத்தல்கள் செய்தல் அல்லது சொத்துகளுக்கு நஷ்டம், இழப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துதல் ஆகும்.


நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தங்களின் ஆட்சியில் அனைத்துவிதமான அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் ஒரு பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டி, தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிச் சங்கங்கள் ஒன்றாக இணைந்து, அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் எங்களது முதல் கோரிக்கையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலம் சமர்ப்பிக்கின்றோம்’’.


இவ்வாறு அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தெரிவித்துள்ளது.