தொடர்ச்சியாக நிதியமைச்சர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து முரணான தகவல்களை கூறி வருவதாகவும், தமிழக முதல்வருக்காகத் தங்களின் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினர். ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில், 5.8.2022 அன்று நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் முயற்சியினால், இன்றைய தினம் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், அன்பாசு, கு. தியாகராஜன் ஆகியோர் கூட்டுத் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரைச் சந்தித்தனர். இச்சந்திப்பானது ஏறத்தாழ 15 நிமிடங்கள் நடந்தது.
இச்சந்திப்பின்போது, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழக முதலமைச்சரிடம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் தொடர்பான கோரிக்கை மனுவினையும் இந்த மாத இறுதியில் ஜாக்டோ ஜியோ நடத்தவுள்ள மாநில மாநாட்டிற்குத் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள இசைவு வழங்க வேண்டும் என்பதற்கான மனுவினையும் அளித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தொடர்ச்சியாக நிதியமைச்சர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து முரணான தகவல்களை கூறி வருவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகப் பேசி வருவது குறித்தும் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கொண்டு சென்றனர்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், 1.1.2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவித அகவிலைப்படியினை வழங்கிட வேண்டும், காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும், பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தினை ரத்து செய்ய வேண்டும் என்பதனையும் முதலமைச்சரிடம் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் 2017 முதல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்போடு எதிர்கட்சித் தலைவராகவும் தற்போது தமிழக முதலமைச்சராகவும் தொடர்ச்சியாக பயணித்துவரும் தமிழக முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தத் திட்டமிட்டுள்ள மாநில மாநாட்டில் பங்கேற்ற வேண்டும் என்ற அழைப்பினை ஜாக்டோ ஜியோ தெரிவித்தது. ஜாக்டோ ஜியோவின் அழைப்பை ஏற்று, தமிழக முதலமைச்சர் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் மீதான தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் இன்றைய சந்திப்பு அமைந்ததற்கு தமிழக முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், சந்திப்பிற்கு வித்திட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களுக்கும் தமிழக அரசிற்குமான நல்லுறவை நிலைநாட்டிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் ஜாக்டோ ஜியோ இத - பரிந்த நன்றிகளை உரித்தாக்குகிறது. சத, பால்டோ ஜியோ கூட்டமைப்பினால் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எதிர்வரும் 5.8.2022 அன்று திட்டமிட்டிருந்த சுவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்-பணியாளர் அமைப்புகள் கோரிக்கை தொடர்பாக நடத்தத் திட்டமிட்டுள்ள அனைத்து இயக்க நடவடிக்கைகளையும் ஒத்திவைக்குமாறு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அன்புடன் கேட்டுக் கொள்கிறது’’.
இவ்வாறு ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.